சற்று முன்



தமிழக பயணிகளின் முதன்மையான சுற்றுலா தலமாக மத்தியப் பிரதேசம் திகழ்வதாக சென்னை ரோட்ஷோவில் அறிவிப்பு !

தமிழக பயணிகளின் முதன்மையான சுற்றுலா தலமாக மத்தியப் பிரதேசம் திகழ்வதாக சென்னை ரோட்ஷோவில் அறிவிப்பு ! 

சென்னை, நோவோடெல்-இல் வெற்றிகரமாக நடைபெற்ற மத்தியப் பிரதேச சுற்றுலாத்துறையின் ரோட்ஷோவிற்கு (சாலைக் கண்காட்சி) தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த பயண ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா தொழில்துறையைச் சார்ந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மத்தியப் பிரதேசத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த சுற்றுலா தளங்கள், சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதிகள் மற்றும் அற்புதமான விருந்தோம்பல் ஆகியவற்றை இந்த நிகழ்ச்சி சிறப்பாக எடுத்துக்காட்டியது; இதன் மூலம் தென்னிந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா செல்ல ஒரு சிறந்த இடமாக மத்திய பிரதேசம் மாநிலம் இருப்பதையும் வெளிக்காட்டியது.

இந்த ரோட்ஷோவின் சாதனைகளை எடுத்துரைத்த ‘சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மத அறக்கட்டளைகள் & அறநிலையத்துறை’யின் முதன்மை செயலாளரும், மத்தியப் பிரதேச சுற்றுலா வாரியத்தின் நிர்வாக இயக்குநருமான திரு. ஷியோ சேகர் சுக்லா அவர்கள், “இந்த சென்னை ரோட்ஷோ மாபெரும் வெற்றிகரமான நிகழ்வாக அமைந்தது. இந்த வெற்றியானது நமது சுற்றுலாத் துறையின் ஒருங்கிணைந்த ஆற்றலின் மீது எங்களுக்குள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் வெறும் சுற்றுலாத்தலம் மட்டுமல்ல; அது வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சாகச பயணங்கள் ஆகியவற்றின் சங்கமமாக இருக்கும் ஒரு அரிய அனுபவமாகும். உறுதிசெய்யப்பட்ட முதலீடுகளின் வலுவான ஆதரவுடன் புதிய முன்முயற்சிகள் மற்றும் மேம்பட்ட சுற்றுலா சேவைகளை வழங்குவதன் மூலம் - மத்தியப் பிரதேசம் இந்தியாவில் அனைவரும் விரும்பத்தக்க ஒரு சுற்றுலா மற்றும் முதலீட்டு மையமாக தொடர்ந்து மேம்படுமென நாங்கள் முழுமையாக நம்புகிறோம்”, என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தை சுற்றிப் பார்ப்பதில் தமிழக பயணிகளிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிக்காட்டும் வகையில், இந்த ரோட்ஷோவிற்கு திரளானோர் வருகை தந்தனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய சுற்றுலா அமைப்புகள், மற்றும் ஹாஸ்பிடாலிட்டி பார்ட்னர்கள் உட்பட இத்துறை சார்ந்த பல தரப்பினரும் இதில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்; இதன் மூலம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மாநிலத்தின் சுற்றுலா சேவையை மேம்படுத்துவதிலும் அவர்கள் பங்களித்தனர்.

ஆன்மீகம், வன உயிரினங்கள் மற்றும் பாரம்பரிய ஸ்தலங்கள் என அனைத்தையும் கொண்ட மாநிலம்

தமிழ்நாட்டின் பயணிகளின் மாறுபட்ட சுற்றுலா விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு வசீகரமான சொர்க்கமாக மத்திய பிரதேசம் உள்ளது. ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு, இந்த மாநிலத்தில் இரண்டு உன்னதமான ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன - உஜ்ஜைனில் உள்ள மகாகலேஷ்வர் மற்றும் ஓம்கரேஷ்வர்; இத்தளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது. கன்ஹா மற்றும் பாந்தவ்கர் தேசிய பூங்காக்களில் வனவிலங்கு ஆர்வலர்கள் மெய்சிலிர்க்கும் சஃபாரி பயணங்களை மேற்கொள்ளலாம் – இவை புலிகளின் காப்பகமாகவும், பல்வேறு உயிரினங்கள் வாழும் பல்லுயிர் வனமாகவும் புகழ் பெற்றவை. இங்கு வரும் வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு - யுனெஸ்கோ அமைப்பால் பட்டியலிடப்பட்ட கஜுராஹோ நினைவுச்சின்னங்கள் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார நுண்ணறிவை பற்றிய ஒரு பிரமிப்பூட்டும் கண்ணோட்டத்தை வழங்குகின்றன.

சென்னையிலிருந்து மத்தியப் பிரதேசம் வரை தடையற்ற போக்குவரத்து வசதிகள் உள்ளன

சென்னை மற்றும் மத்திய பிரதேசம் இடையேயான பயணம் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. சென்னை – போபால் மற்றும் இந்தூர் போன்ற முக்கிய நகரங்களிடையே வழக்கமான விமான சேவைகள் உள்ளதால், இவை விரைவான மற்றும் சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன. அதுமட்டுமின்றி, நேரடி இரயில் சேவைகளும் உள்ளதால் ஏதுவான செலவிலும், அழகிய இரயில் பாதை இம்மாநிலத்திற்கு வரலாம். மத்திய தேசத்திற்கு வந்தவுடன், சுற்றுலாப் பயணிகள் அதன் விரிவான சாலை நெட்வொர்க்கைப் பயன்படுத்தலாம் - இச்சாலைகள் அனைத்து முக்கிய இடங்களையும் எளிதாக அணுக உதவுகின்றன.

யுனெஸ்கோ-வினால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் வரலாற்று இடங்கள்

கஜுராஹோவில் உள்ள கலைநயம் மிக்க கோயில்கள், பண்டைய பௌத்த தளமான சாஞ்சி ஸ்தூபி, மற்றும் பீம்பேட்காவில் உள்ள கற்கால பாறை வசிப்பிடங்கள் உட்பட யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட 18 உலக பாரம்பரிய தளங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. இத்தளங்கள் யாவும் இந்தியாவின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை மகத்துவம் குறித்த ஒரு ஆழமான பார்வையை நமக்கு வழங்குகின்றன.

கலை, கைவினை பொருட்கள் மற்றும் உணவு வகைகளின் கலாச்சார சங்கமம்!

மத்தியப் பிரதேசத்திற்கு ஒவ்வொரு முறையும் சுற்றிப் பார்ப்பதற்கு மட்டும் செல்லாமல், அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிப்பதற்கும் செல்லலாம். சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் சமையல் பதார்த்தங்களை ருசிக்க விரும்பினால் இப்பகுதிக்கே உரிய தனித்துவமான பதார்த்தங்களை சுவைத்து மகிழலாம். கைவினைப்பொருட்களான சாந்தேரி மற்றும் மகேஸ்வரி போன்ற கைத்தறி ஆடைகளுக்கும், கோண்ட் மற்றும் பில் ஓவியங்கள் போன்ற பழங்குடி கலை வடிவங்களுக்கும் மத்திய பிரதேசம் புகழ்பெற்றது. இந்த கலை மற்றும் கலாச்சார அம்சங்கள் மத்தியப் பிரதேசத்தின் ஒவ்வொரு பயணத்தையும் ஒரு முழுமையான மற்றும் வசீகரமான அனுபவமாக மாற்றக்கூடியவை என்றால் அது மிகையாகாது.

பாதுகாப்பாகவும், திட்டமிட்டு பயணிக்கவும் ஏதுவான இடம்

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் மத்திய பிரதேசம் ஒரு பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்பட்ட சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. சுற்றுலாவிற்கு ஏதுவான கொள்கைகளை உருவாக்குவதில் அம்மாநில அரசாங்கம் தனிக் கவனம் செலுத்தியுள்ளதால் - மாநிலத்திற்குள் மேற்கொள்ளும் பயணங்கள் எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் சுற்றுலா

சுற்றுலாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காரணமாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் கணிசமாக உயர்ந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. 2024-இல் 133 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இம்மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளனர். முன்பு 2022-இல் 34.1 மில்லியனாக இருந்தது. ஒரு முக்கிய ஆன்மீக சுற்றுலா மையமாக அதன் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக உஜ்ஜைன் நகருக்கு மட்டும் 52.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வருகை புரிந்துள்ளனர்.

தமிழக சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா செல்லும் முக்கிய இடமாக மத்திய பிரதேசம் இருப்பது இந்த சென்னை ரோட்ஷோவின் மூலம் தெரியவந்துள்ளது. தடையற்ற போக்குவரத்து இணைப்பு, வளமான கலாச்சார பாரம்பரியம், பன்முகத்தன்மை வாய்ந்த அனுபவங்கள் மற்றும் உயர்தர விருந்தோம்பல் ஆகியவற்றுடன், வியத்தகு இந்தியாவின் இதயப் பகுதியாக மத்தியப் பிரதேசம் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

ஆடம்பரம் விடுதிகள் முதல் ஹோம்ஸ்டே வரையிலான உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் வசதிகள்

பல்வேறு விதமான பயணிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அவரவருக்கு ஏற்ற தங்குமிட வசதிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. உயர்தர வசதிகளை வழங்கும் ஆடம்பர ரிசார்ட்டுகளான தாஜ், மேரியட், ராடிசன், ரமாடா, தி பார்க் மற்றும் கிளாரியன் இன் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகள் போபால், இந்தூர் மற்றும் ஜபல்பூர் போன்ற முக்கிய நகரங்களில் உள்ளன. வரலாறு மற்றும் ஆடம்பரத்தின் ஒருங்கிணைப்பை வழங்கும் கிராண்ட் ஹவேலிகள் மற்றும் இராஜ அரண்மனைகள் உட்பட இங்குள்ள பாரம்பரிய ஹோட்டல்கள் விருந்தினர்களை அரச உபசரிப்பில் சிலாகிக்க வைக்கின்றன. 208 சுற்றுலாத் திட்டங்களை அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது; இதன் மூலம் 7,151 புதிய ஹோட்டல் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் விருந்தோம்பல் உள்கட்டமைப்பு கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அசலான கலாச்சார அனுபவத்தினை வழங்கும் விதமாக ஹோம்ஸ்டேக்கள் மற்றும் ஈக்கோ-டூரிஸம் தங்குமிடங்களும் உள்ளன; இவற்றில் பயணிகளுக்கு உள்ளூர் சமூகங்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு நேரடியாக கிடைக்கின்றன. சுற்றுலா திட்டங்களில் ₹3,850 கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் மத்திய பிரதேச மாநிலம் - உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தயார்நிலையில் உள்ளது. 

சுற்றுலாப் பயணிகளுக்கு விரிவான பயண உதவிகள்

மத்தியப் பிரதேச சுற்றுலாத்துறை நன்கு விளக்கமான பயணத் திட்டங்களைத் தொகுத்து வழங்குவதோடு, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஆபரேட்டர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்ட அனுபவம் வாய்ந்த பயண வல்லுநர்கள் இருப்பதால், மாநிலம் முழுவதும் தடையற்ற மற்றும் நிறைவான சுற்றுலா அனுபவங்களை வழங்குவதையும் சுற்றுலாத்துறை உறுதி செய்துள்ளது.

மத்தியப் பிரதேச சுற்றுலா பற்றிய விரிவான தகவலுக்கு, பின்வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் mptourism.com.


கருத்துகள் இல்லை