சற்று முன்



ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 விழாவில் மாற்றத்தை உருவாக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு !

ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 விழாவில் மாற்றத்தை உருவாக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு !

சேவை, பராமரிப்பு மற்றும் சமூகத்தின் மீது தாக்கம் ஆகிய அம்சங்களில் மிகச்சிறந்த செயல்பாட்டை இவ்விருதுகள் அங்கீகரிக்கின்றன

சென்னை, மார்ச் 16, 2025: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வசிக்க ராஜஸ்தானிய சமூகத்தினரின் சார்பாக, இரு மாநில மக்களின் நலனுக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 என்ற நிகழ்வை முதன்முறையாக ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு பெருமையுடன் நடத்தியது.


சென்னை டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் சாதனையாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. கே. ஆர். ஸ்ரீராம் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025-ஐ சாதனையாளர்களுக்கு வழங்கினார். துக்ளக் தமிழ் வார இதழின் ஆசிரியர் மற்றும் விருதாளர்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவின் தலைவர் திரு. எஸ். குருமூர்த்தி, சி.ஏ., அவர்கள், "தமிழ்நாட்டில் ராஜஸ்தானியர்கள்: 100 வருட பாரம்பரியம்" என்ற பெயர் விவரக் கையேட்டை வெளியிட்டார். இத்தகைய தகவல் அடங்கிய நூல் தமிழ்நாட்டில் வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.

🏆 ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 வென்ற சாதனையாளர்கள்

1. டாக்டர். இறை அன்பு, முன்னாள் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு, பொது சேவை/அரசு பணி பிரிவில் விருது பெற்றார். இந்தியாவில் ஆளுகை, கல்வி மற்றும் இலக்கியத்தில் அவரது விவேகம், தலைமைத்துவம் மற்றும் பணியில் அழியாத முத்திரையை அவர் பதித்திருக்கிறார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் (1988) 15வது இடத்தைப் பிடித்த அவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக உயர்ந்து, நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறைகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை வடிவமைத்து அரசின் முக்கிய அமைப்புகளை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஒரு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், 100+ ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார், 50+ பி.எச்.டி. (முனைவர் பட்டப்படிப்பு) அறிஞர்களை உருவாக்கிய பெருமை இவருக்குரியது. 50+ கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு தனது உரையின் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளார். அவரது 2,000+ உரைகள், 1,500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் 1,000+ வானொலி உரைகள் நாடு முழுவதும் உள்ள மக்களின் மனங்களில் ஆக்கபூர்வ மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டியுள்ளன. 179 புத்தகங்களை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளராகவும் திகழும், பண்டைய ஞானத்தையும், விவேகத்தையும் நவீன தலைமைத்துவத்துடன் இணைக்கும் இவரின் திருக்குறள் மற்றும் புறநானூறு பற்றிய படைப்புகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 

ஒரு வழிகாட்டியாகவும், தலைவராகவும், அறிஞராகவும், தொலைநோக்கு சிந்தனையாளராகவும் செயல்பட்டிருக்கும் இவரது அசாதாரண பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாகவும் மற்றும் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென்ற உத்வேகத்தை வழங்குவதற்காகவும் இவ்விருதுக்காக நடுவர்கள் குழு டாக்டர். இறை அன்பு அவர்களை தேர்வுசெய்துள்ளது.

2. திரு. சி.டி. சனத் குமார் அவர்கள் கல்வித் துறையில் சாதனைக்காக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கேம்பிரிட்ஜ் / இண்டஸ் வேலி மேனிலைப் பள்ளிகளின் நிறுவனரான இவர், தொலைநோக்கு பார்வையுடன் கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாடு மூலம் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தந்திருக்கிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக, திரு. சி.டி. சனத் குமார், ஒரு சிறந்த மாற்றத்திற்கான சக்தியாக இருந்து வருகிறார்; சனத்குமார் அறக்கட்டளை, கேம்பிரிட்ஜ் பப்ளிக் இ-ஸ்கூல் (சிபிஎஸ்இ), மூத்த குடிமக்களுக்கான ஆனந்தமயி கேட்டட் கம்யூனிட்டி, ஆனந்தம் ஸ்பைன் & ஜாயிண்ட் கிளினிக் மற்றும் ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து கிராமப்புற தகவல் மையம் ஆகியவற்றை நிறுவிய சாதனைகளுக்கு இவர் சொந்தக்காரர். இவரது சேவையின் தாக்கம் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டினத்தில் மிக ஆழமாக உணரப்படுகிறது. இந்தியாவுக்கே உரிய மதிப்பீடுகளை யோகா, தியானம், விளையாட்டு மற்றும் ஐஐடி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடமிருந்து கிடைக்கும் அதிநவீன கற்றலுடன் கலந்து கல்வியில், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு முறையை இவர் உருவாக்கியுள்ளார். விண்வெளி அறிவியலை வகுப்பறைக்கு கொண்டு வந்து, விண்வெளி கனவுகளை மாணவர்களின் இளம் மனங்களில் விதைத்திருக்கிறார். செயல்பாட்டின் மூலம் கற்றல் என்ற கோட்பாட்டில் இவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார். டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இவரது இயற்கை விவசாயத் திட்டம், மாணவர்களுக்கு விவசாயத்தின் மதிப்பையும், மாண்பையும் கோட்பாட்டின் வழியாக அல்லாமல், வயல்வெளிகளில் கைப்பட பணியாற்றுவதன் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவரது வாழ்க்கை அதிக ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிப்பதாக இருப்பதால், ‘வசந்த் சாய்’ (2017) இயக்கிய தேசிய விருது பெற்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இவரது பயணம் கடந்த ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்ட "சக்கரா யாகம்" என்ற வாழ்க்கை வரலாற்று நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேவை, புதுமை மற்றும் தேசக் கட்டமைப்பு ஆகியவற்றின் மீது இவரது அயராத அர்ப்பணிப்பிற்காக, திரு. சி.டி. சனத் குமார் அவர்களுக்கு இந்த மதிப்புமிக்க விருதினை வழங்கி கௌரவிக்க நடுவர் குழு இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது.

3. இந்தியாவின் மர மனிதர் என அழைக்கப்படும் திரு. எம். யோகநாதன், சுற்றுச்சூழல் சார்ந்த நிலைப்புத்தன்மை துறையில் விருதுக்காக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இவரது அயராத அர்ப்பணிப்பும், பணியும் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு நிலைமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 36 ஆண்டுகளாக, சுமார் 35 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, தரிசு நிலங்களை பசுமை வெளிகளாக இவர் மாற்றியிருக்கிறார். இப்பணியை ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கானோர் மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இவர் இருந்திருக்கிறார். இவரது பயணம் கோவையில் ஒரு பேருந்து நடத்துனராக தொடங்கியது; அங்கு அவர் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை விநியோகிக்கத் தொடங்கினார்; சிறிய செயல்கள் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை தனது நடவடிக்கையின் மூலம் இவர் நிரூபித்திருக்கிறார். 30 லட்சத்திற்கும் அதிகமான தனது சொந்த தனிப்பட்ட முதலீட்டில், இவர் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இவரது தாக்கம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "மன் கி பாத்" (2021) நிகழ்வில் இவரது பெயரை குறிப்பிட்டு கௌரவித்தார்; மேலும் "பசுமைப் போராளி", "ரியல் ஹீரோ", "கிரீன் ஹீரோ விருது" மற்றும் "கிளைமேட் வாரியர்" ஆகிய பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம், முகேஷ் அம்பானி மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற தொலைநோக்கு சிந்தனையாளர்களும், பிரபல ஆளுமைகளும் இவரது அசாதாரண முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் மனமாரப் பாராட்டியுள்ளனர். மரக்கன்றுகளை நடுதல் என்ற தனது செயல்பாட்டுக்கும் அப்பால், அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமையான எதிர்காலத்திற்கான ஆர்வத்தை அடுத்த தலைமுறையிடம் தூண்டுகிறார். இயற்கையின் உண்மையான பாதுகாவலரான இவரது பணி, ஒரு நபர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் ஆற்றலுக்கு மிகச்சிறந்த சான்றாகும். 

திரு. எம். யோகநாதனின் வியக்க வைக்கும் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் விதத்தில் இவ்விருதுக்காக நடுவர்கள் குழு இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது.

4. சுவாமி விவேகானந்தா கிராமப்புற வளர்ச்சி சங்கம் (SVRDS), 1979 முதல் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி மாற்றியமைத்ததற்காக சமூக நலத் துறையில் விருது பெற்றிருக்கிறது. 45 ஆண்டுகளாக, சுவாமி விவேகானந்தா கிராமப்புற வளர்ச்சி சங்கம் (SVRDS) தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் 1,000 கிராமங்களை சென்றடைந்து, முழுமையான கிராமப்புற வளர்ச்சிக்கு ஒரு தூணாக இருந்து வருகிறது. திரு. எஸ். வேதாந்தம் ஜியின் தலைமையில், கல்வி, துப்புரவு, நீர் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இச்சங்கத்தின் முன்னெடுப்புகள் முயற்சிகள் லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு உதவியிருக்கின்றன. 27,000 குழந்தைகளுக்கு மாலை நேரப் பள்ளிகள் துணை மற்றும் கலாச்சார கல்வியை வழங்குகின்றன. 

சுகாதார முகாம்கள் 20,000 கிராம மக்களுக்கு கண் பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல் சேவைகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. 3,700+ தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு, 20,000 பேருக்கு தூய்மை நிலையும், கண்ணியமும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. 100+ குளங்கள் தூர்வாரப்பட்டு, 2,50,000 கிராமவாசிகளுக்கு நீருக்கான அணுகுவசதி கிடைக்குமாறு செய்யப்பட்டிருக்கிறது. 1,500+ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 80% பேர் தங்கள் கிராமங்களில் நிலையான வேலைகளைப் பெற்றிருக்கின்றனர். 700+ பெண்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஊட்டுனர் உரிமங்களையும், வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர். இச்சங்கத்தின் சிறப்பான சேவைக்காக, மாண்புமிகு பிரதமர் மற்றும் தமிழ்நாடு ஆளுநரின் பாராட்டையும், அங்கீகாரத்தையும் SVRDS பெற்றிருக்கிறது. சுயசார்பு, 

அதிகாரம் பெற்ற கிராமப்புற இந்தியாவை கட்டியெழுப்புவதில் இச்சங்க நிர்வாகிகளின் தளராத அர்ப்பணிப்பிற்காக விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இச்சங்கத்தின் சார்பாக தலைவர் டாக்டர் ஆர். கிருஷ்ணன் இவ்விருதினைப் பெற்றிருக்கிறார். 

விருதுபெற்ற சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் பாரம்பரிய ராஜஸ்தானி சாஃபா (தலைப்பாகை) அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். ஒரு கோப்பை, ஒரு சான்றிதழ் மற்றும் ₹2 லட்சம் ரொக்கப் பரிசு ஒவ்வொரு விருதாளருக்கும் வழங்கப்பட்டது. அர்த்தமுள்ள மாற்றத்தை சமுதாயத்தில் ஏற்படுத்துபவர்களை அங்கீகரித்து கௌரவிப்பதில் ராஜஸ்தானி சமூகத்தின் உறுதிப்பாட்டை இவ்விருது நிகழ்வு மேலும் வலுப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் 25 பெருநகரங்கள் மற்றும் நகரங்களிலிருந்து பெறப்பட்ட 231 விண்ணப்பங்கள் / பரிந்துரைகளிலிருந்து, மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட கவனமான தேர்வு செயல்முறை மூலம் சமுதாயத்தில் நிலைப்புத்தன்மையுள்ள தாக்கத்தை ஏற்படுத்திய நான்கு சிறந்த சாதனையாளர்கள் இவ்விருதுகளுக்காக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

திரு. எஸ். குருமூர்த்தி CA அவர்கள் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு ஒவ்வொரு பரிந்துரையையும் கவனமாக ஆய்வு செய்தது. மதிப்புமிக்க இந்த நடுவர் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

திரு. என். ரவி – முன்னாள் தலைமை ஆசிரியர், தி இந்து

பத்ம விபூஷண் திருமதி. பத்மா சுப்ரமணியம் – புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர்

திரு. என். சுகல்சந்த் ஜெயின் – தொழிலதிபர் மற்றும் கொடையாளர்

பேராசிரியர் பி. பாலகுருசாமி – சிறந்த கல்வியாளர் மற்றும் முன்னாள் துணைவேந்தர்

பிரவீன் டாடியா – பதவி வழி, தலைவர், ராஜஸ்தானி அசோசியேஷன் - தமிழ்நாடு மற்றும் உறுப்பினர், சிறுபான்மையினர் ஆணையம், தமிழ்நாடு அரசு

விருது பெற்ற சாதனையாளர்கள் கல்வி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொது சேவை மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் சிறந்த செயல்பாடுகளை நிரூபித்திருக்கின்றனர். சமூகத்தின் மீது ஆக்கப்பூர்வ தாக்கத்தின் மிக உயர்ந்த தரநிலைகளை இவர்கள் பிரதிபலிக்கின்றனர். 

🔹 ‘தமிழ்நாட்டில் ராஜஸ்தானியர்கள் – 100 வருட பாரம்பரியம்’ ஒரு சிறந்த நூல் வெளியீடு:

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, ‘தமிழ்நாட்டில் ராஜஸ்தானியர்கள்: 100 வருட பாரம்பரியம்’ என்ற ஒரு சிறந்த நூல், ஒரு தகவல் களஞ்சியமாக வெளியிடப்பட்டது, இது தமிழ்நாட்டில் ராஜஸ்தானியர்களின் ஒரு நூற்றாண்டு காலஅளவிற்கு கொடை மற்றும் சமூக பங்களிப்புகளைப் பதிவு செய்கிறது. திரு. எஸ். குருமூர்த்தி CA. அவர்களால் இந்த புத்தகம் முறையாக வெளியிடப்பட்டது. இந்நூல், ராஜஸ்தானி சமூகத்தின் மிக நேர்த்தியான சேவை மற்றும் செயற்பணிகள் ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய மதிப்புகளை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறது. 

🔹 எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்கு பார்வை

ராஜஸ்தானி சங்கத்தின் தலைவர் திரு. பிரவீன் குமார் டாடியா பேசுகையில், “உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை கொண்டாடுவதற்கான எமது தொலைநோக்குப் பார்வையை இந்த விருதுகள் நிகழ்வு பிரதிபலிக்கிறது. இது வளர்ச்சி மற்றும் செழிப்பின் பகிரப்படும் எதிர்காலத்திற்காக சமூகங்களுக்கிடையில் வலுவான பிணைப்புகளை வளர்க்கிறது.” என்று கூறினார். 

ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளின் தலைவர் திரு. நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் கூறியதாவது:

“சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கியிருக்கும் இச்சாதனையாளர்களை கௌரவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் வாழ்க்கை வரலாறுகள், எதிர்கால சந்ததியினருக்கு சமூகப் பொறுப்பை ஏற்று இன்னும் ஆர்வத்துடன் செயல்பட ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.”

ராஜஸ்தானி-தமிழ் சேவை விருதுகளின் ஒருங்கிணைப்பாளர், அனில் கிச்சா, சி.ஏ. பேசுகையில், “

“இவ்விருதுகளுக்காக 231 நபர்கள் / அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்த அமோகமான வரவேற்பு இம்முயற்சியின் பொருத்தத்தையும், சிறப்பினையும் நிரூபித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் வெகுதூரம் பரவும் 'நன்மையின் நேர்மறையான வைரஸை' நாங்கள் தூண்டி பரவச் செய்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.” என்று கூறினார். 

ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள், ஒரு வருடாந்திர நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இது சமூகத்திற்கு விதிவிலக்கான பங்களிப்புகளை வழங்கும் நபர்களை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் கொண்டாடவும் ஒரு மதிப்புமிக்க தளமாக தன்னை இது நிலைநிறுத்திக் கொள்ளும். 

திரு. எஸ். குருமூர்த்தி சி.ஏ. அவர்கள், டிசம்பர் 21, 2024 அன்று துவக்க விழாவிலிருந்து திறம்பட பணியாற்றி, உறுதியளித்தபடி விருது செயல்முறையை வெற்றிகரமாக நடத்திய சங்க நிர்வாகிகளைப் பாராட்டினார். இந்த முயற்சி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கான அக்கறை மற்றும் சேவை செயற்பரப்பை விரிவாக்குவதில் பெரும் பங்காற்றும் என்று தனது உரையில் கூறினார். 

விழாவின் தலைமை விருந்தினரான சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. கே. ஆர். ஸ்ரீராம், , ராஜஸ்தானி சமூகத்தின் இந்த நல்ல முயற்சியைப் பாராட்டினார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமூக நிறுவனங்களையும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதில் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டார். 

பொதுச் செயலாளர் திரு. ஹேமந்த் துகார் இந்த விழா அர்த்தமுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைய காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை