ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !
ZEE5 ஒரிஜினல் ஐந்தாம் வேதம் சீரிஸின் முன் திரையிடல் நிகழ்வு !
ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர்.
இந்த அதிரடி திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது...
எங்கள் படைப்புகளைப் பாராட்டி ஊக்கம் தரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படைப்பிற்கு உறுதுணையாக இருந்த சிஜு பிரபாகரன் சாருக்கு நன்றி. இந்த படைப்பைத் தயாரிப்பது மிக கஷ்டமான விசயம், அதைச் சாத்தியமாக்கிய அபிராமி ராமநாதன் சாருக்கு நன்றி. அஜய் மனதில் உள்ளதைப் பேசி விடுவார் இந்த சீரிஸ் உருவாக மிக முக்கிய காரணம் அவர் தான், நாகா சாருடன் ஆரம்ப காலங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரை அப்போதிருந்தே பிரமிப்பாகப் பார்த்து வருகிறேன், இன்னும் பிரமிப்பாகவே இருக்கிறது. தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். தன்ஷிகா மிக அருமையாக நடித்துள்ளார், சந்தோஷ் பிரதாப் இந்த பாத்திரத்தை மிகச்சிறப்பாகக் கையாண்டுள்ளார். அனைத்து நடிகர்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும், நன்றி
அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அஜய் கூறுகையில்...
இந்த படைப்பு உருவாக 3 வருடம் ஆனது, எதற்கு 3 வருடம் என்பது நீங்கள் பார்த்த போது தெரிந்திருக்கும். ஒரு வெப்சீரிஸை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எடுத்தால், அது தயாரிப்பு நிறுவனத்துக்கு லாபம் தராது, ஆனால் இந்தக்கதையை மிகச் சிறப்பாக, மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் தர வேண்டும் என்ற உறுதியுடன், அபிராமி ராமநாதன் சார், நல்லம்மை ராமநாதன் அவர்கள் இணைந்து தயாரித்துள்ளார்கள். அடுத்தடுத்து வரும் வெப் சீரிஸிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் இந்த சீரிஸை தந்துள்ளார்கள், அவர்களுக்கு நன்றி. மிகச்சிறந்த ஒத்துழைப்பைத் தந்த சிஜு சார், நண்பர் கௌஷிக் இருவருக்கும் நன்றி. கௌஷிக் இல்லாமல் இந்த சீரிஸ் சாத்தியமில்லை அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் நாகா, எதற்கும் காம்பரமைஸ் ஆகாத இயக்குநர் அவருக்கு நன்றி, நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த சீரீஸ் பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்.
அபிராமி மீடியா ஒர்க்ஸின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கூறுகையில்...,
மிக நீண்ட நாட்களாவிட்டது, இடையில் எங்கள் தயாரிப்பில் "விநோத சித்தம்" படத்தை உருவாக்கினோம், அது நல்ல வெற்றி. ZEE5 லிருந்து இது நல்ல கதை, தயாரியுங்கள் என்றனர், இந்த டீம் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநர் நாகாவின் மர்மதேசம் தொடருக்குத் தீவிர ரசிகன் நான், ஒய் ஜி மகேந்திரன் என்னுடன் படித்தவர், நல்ல டீம், நாகா கதை சொன்னார், ஐந்தாம் வேதம் இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியாது, இந்த சீரிஸ் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் பற்றிப் பேசுகிறது. ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் கொலையும் செய்யும், மனித உருவும் எடுக்கும், கடவுளை மீறி விடும், மிகப் பரபரப்பான திருப்பங்களுடன் நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் 25 ஆம் தேதி வெளியாகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
அபிராமி மீடியா ஒர்க்ஸ் CEO டாக்டர் சீனிவாசன் கூறுகையில்...,
இந்த சீரிஸ் எடுக்கும் போது பல தடைகள் இருந்தது, அனைத்து பிரச்சனைகளையும் அபிராமி ராமநாதன் சார் மிக எளிதாகத் தீர்த்து விடுவார், இந்த சீரிஸ் எந்தளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் பார்க்கும் போதே தெரியும், இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். எங்கள் விநோத சித்தம் படத்திற்குத் தந்தது போல் இந்த சீரிஸிற்கும் முழு ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன், ZEE5 உடன் எங்களது இனிமையான பயணம் தொடரும், நன்றி.
இசையமைப்பாளர் ரெவா கூறுகையில்...
அயலிக்குப் பிறகு மீண்டும் இந்த சீரிஸில் பணியாற்றியது, மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்கும் என நம்புகிறேன். இந்த சீரிஸில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் எனது நன்றி. பட குழுவினருக்கு நன்றி.
நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறுகையில்...,
இந்த சீரிஸில் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸிற்காக நிறைய புதிய இடங்கள், நம்ப முடியாத இடங்களுக்கெல்லாம் பயணித்திருக்கிறேன், பல ஊர்களுக்குப் பயணித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அறிமுக நடிகர்கள் முதல் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் வரை நிறையப் பேர் இதில் நடித்துள்ளார்கள், எல்லோரிடமும் நல்ல நட்பு உள்ளது. எல்லோருமே மிகச் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள் வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து போது, அனைவருக்கும் காய்ச்சல், ஆனால் யாருமே ஓய்வெடுக்காமல் உழைத்தார்கள். நாகா சாரின் தீவிர ரசிகன், மிகப் பொறுமையாக அனைவரையும் கையாள்வார். அவரது பொறுமை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடன் நடித்த சிறு பையனுக்குக் காட்சியை அவ்வளவு விளக்கமாகச் சொல்லி, நடிப்பை வாங்குவார். அவரை பார்க்க ஆசையாக இருக்கும். அவருக்காகத் தான் இந்த சீரிஸ் நடித்தேன், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன், அவருடைய படைப்பில் இன்னும் நிறைய நடிக்க ஆசை. என்னுடன் நடித்த தன்ஷிகா மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். அவருக்கு இது முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். ZEE5 மற்றும் அபிராமி மீடியா ஒர்க்ஸ் இருவருக்கும் நன்றி, மிகச் சிறப்பாக பார்த்துக் கொண்டார்கள். இந்த சீரிஸ் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை தன்ஷிகா கூறுகையில்...
உங்களோடு இணைந்து இந்த சீரிஸ் பார்த்தது, மிக மிகத் திருப்தியாக இருந்தது. தாய் மொழியில் மீண்டும் ஒரு படைப்பு, மிகத் திருப்தியாக இருக்கிறது. ஐந்தாம் வேதம் மூலம் மிகச்சிறந்த குழுவுடன் இணைந்து பயணித்து மகிழ்ச்சி. என் சின்ன வயதில் மர்ம தேசம் மிகப்பெரிய பயத்தைத் தந்த சீரிஸ், எனக்கு மிகப்பிடித்த சீரிஸ், நாகா சார் கூப்பிடுகிறார் என்றவுடன் உடனே அவர் ஆபீஸ் போய்விட்டேன், ஐந்தாம் வேதம் பற்றிச் சொன்னார், அனு கதாப்பாத்திரம் பற்றிச் சொன்னார். அவர் ஐடியாவே பிரமிப்பாக இருந்தது, அவரிடம் பேசினாலே பிரமிப்பாக இருக்கும். இந்த சீரிஸில் எங்கள் படக்குழு கடுமையான உழைப்பைத் தந்துள்ளார்கள். பல தடைகள் இருந்தது, ஆனால் அபிராமி ராமநாதன் சார் அனைத்தையும் மிக எளிதாகக் கையாண்டார், அவருக்கு நன்றி. ஒய் ஜி மகேந்திரன் சார் உடன் நடித்தது மிக ஜாலியான அனுபவமாக இருந்தது. ZEE5 மூலம் இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் சென்று சேரவுள்ளது, இந்த சீரிஸை, எங்களை நம்பியதற்கு ZEE5 க்கு நன்றி. என்னை நம்பி இந்த பாத்திரம் தந்த நாகா சாருக்கு நன்றி. இந்த சீரிஸிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் பொன் வண்ணன் கூறுகையில்...
இந்த படைப்பின் கதாநாயகன் நாகா சார், மர்ம தேசம் வந்து 25 வருடங்களாகிவிட்டது, 25 வருடங்கள் கடந்தும், அதே மனநிலையோடு, அதே திறமையோடு இருக்கும் நாகா சாரை பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. நாகா சார் நினைத்ததைச் செய்வதில் வல்லவர். மிகமிக நுணுக்கமான கலைஞன், ஒவ்வொரு நடிகரிடம் அவர் நடிப்பு வாங்குவதைப் பார்க்க அலாதியாக இருக்கும், இப்படிப்பட்ட மாகா கலைஞனோடு மீண்டும் இந்த ஐந்தாம் வேதம் சீரிஸில் பயணித்தது மகிழ்ச்சி. இந்த சீரிஸை தயாரித்திருக்கும் அபிராமி ராமநாதன் அவர்களும் கலைத்துறையில் முன்னோடி. அவர் தயாரித்த விநோத சித்தம் படமும், இந்த ஐந்தாம் வேதம் சீரிஸை தயாரித்ததும் அவர் முன்னோடி சிந்தனையாளர் என்பதை நிரூபிக்கிறது. காலம் தந்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு வெப் சீரிஸ், அதை முழுமையாகப் புரிந்து கொண்டு, நல்ல கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து,, அயலி, வீரப்பன் என ZEE5 அருமையான படைப்பைத் தந்து வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த சீரிஸை அவர்கள் அனைத்து தரப்பினருடமும் எடுத்துச் செல்கிறார்கள். நடிகை தன்ஷிகா பேராண்மையிலிருந்து கவனித்து வருகிறேன் மிகச்சிறந்த நடிகை, அவருக்கு இந்த சீரிஸ் நல்ல பெயரைப் பெற்றுத் தரும், அனைவருக்கும் நன்றி.
நடிகர் ஒய் ஜி மகேந்திரன் கூறுகையில்...,
பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார்கள் அப்போதே தெரிந்து விட்டது, இந்த சீரிஸ் மிகப்பெரிய வெற்றி என்று, ZEE5 க்கும் அபிராமி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும், உங்களுக்கு வாழ்த்துக்கள். மிஸ்டரி இயக்குநர் நாகா, மிகத்திறமையான இயக்குநர் அவருடன் நான்கு படைப்புகளில் பணிபுரிந்துள்ளேன் அவர் ஒரு நடிகரை ஒரு பாத்திரத்திற்குத் தேர்வு செய்தால் அது கன கச்சிதமாக இருக்கும். எல்லோரிடமும் மிகச்சிறப்பாக வேலை வாங்கி விடுவார், எப்போதும் முழுக்கதையும் சொல்ல மாட்டார், நான் இன்னும் முழுமையாக சீரிஸ் பார்க்கவில்லை, பார்க்க ஆவலாக இருக்கிறேன். நாகா ரிசர்ச் செய்யாமல் ஒரு சீரிஸ் செய்யமாட்டார், அவர் பெர்ஃபெக்ஸனிஸ்ட். அவர் சின்னத்திரை ஸ்பீல்பெர்க் என்பேன். எல்லோரும் நல்ல பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் நாகா கூறுகையில்
ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன், முழுமையாக முடிந்த பிறகு கௌஷிக்கிடம் தந்தேன், சிஜுவுக்கும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே ஆரம்பிக்கலாம் என்றார். 7 மாதம் திரைக்கதை வேலை மட்டும் பார்த்தோம். பின்னர் தான் அபிராமி வந்தார்கள், எல்லாம் இனிமையாக நடந்தது. என்னோடு இந்த திரைக்கதையை மணிகண்டன் இணைந்து எழுதினார் அவருக்கு என் நன்றி. ஏஐ பற்றிய பயத்தை, நான் இந்த சீரிஸில் கொஞ்சம் பேசியிருக்கிறேன், இன்னும் 2 சீசன் இருக்கிறது, அதில் மனிதர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பது கதையாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்குமென நம்புகிறேன் உங்கள் ஆதரவைத்தாருங்கள் அனைவருக்கும் நன்றி.
ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது !
கருத்துகள் இல்லை