காவேரி கருப்பைவாய் புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டம் அறிமுகம் !
காவேரி கருப்பைவாய் புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டம் அறிமுகம்:
பெண்களின் உடல்நலம் என்ற இலக்கை நோக்கிய ஒரு மைல்கல் நிகழ்வு :
சென்னை: 24 பிப்ரவரி, 2024: காவேரி கருப்பைவாய் புற்றுநோய் (செர்விக்கல் கேன்சர்) ஸ்க்ரீனிங் செயல்திட்டம் என்பதை தொடங்கியிருப்பதன் மூலம் பெண்களின் ஆரோக்கியம் என்ற இலக்கை நோக்கி காவேரி மருத்துவமனை, ஒரு மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் ஆம்பெர் ஜேடு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, கருப்பைவாய் புற்றுநோய் என்ற அச்சுறுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும் மற்றும் சுகாதார சேவைகளைப்பெற அனைவருக்கும் சமஅளவிலான வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் வேண்டுமென்ற காவேரி மருத்துவமனையின் பொறுப்புறுதியை வலுவாக சுட்டிக்காட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கும் கருப்பைவாய் புற்றுநோய், உலகளவில் ஒரு முக்கியமான சுகாதார பிரச்சனையாக தொடர்கிறது. பெண்கள் மத்தியில் உயிரிழப்பிற்கான ஒரு முதன்மைக் காரணமாக இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 70% பெண்களுக்கு ஸ்க்ரீனிங் சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை இருக்கின்ற போதிலும், இந்தியாவில் 1.9% பெண்கள் மட்டுமே கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் சோதனைகளை மேற்கொள்கின்றனர். எனவே, உலக சுகாதார அமைப்பின் இலக்கை எட்டுவதில் நாம் காட்டவேண்டிய அவசியத்தையும், அவசரத்தையும் சுட்டிக்காட்டிய காவேரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். T.S. சபீஹா, இதுகுறித்த அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் பெண்களின் பங்கேற்பை வலியுறுத்தினார்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தோடு மருத்துவமனை வளாகத்தில் இதற்கான ஸ்க்ரீனிங் பரப்புரை திட்டத்தை நடத்தியிருக்கும் காவேரி மருத்துவமனை சமூக அளவிலும், வாராந்திர அடிப்படையில் ஸ்க்ரீனிங் முகாம்களை நடத்துகிறது. அங்கு இந்த ஸ்க்ரீனிங் சோதனைகள் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக பேசிய டாக்டர். சபீஹா, “தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வே 5 – ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடைவெளியை இந்த முன்னெடுப்பின் வழியாக நிரப்ப நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்; உரிய காலஅளவுகளில் ஸ்க்ரீனிங் சோதனைகள், தடுப்பூசி மருந்து செலுத்துதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகள் கடைப்பிடித்தல் மீது விழிப்புணர்வை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.” என்று கூறினார்.
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் ஆம்பெர் ஜேடு அவர்கள் இச்செயல்திட்டத்தை தொடங்கி வைத்து இந்த முன்னெடுப்பிற்காக காவேரி மருத்துவமனையை பாராட்டியிருப்பதால், சர்வதேச அங்கீகாரத்தை இந்நடவடிக்கை பெற்றிருக்கிறது. இந்நிகழ்வில் அமைச்சர் ஆற்றிய உரையில், “காவேரி மருத்துவமனையில், கருப்பைவாய் புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தை தொடங்கி வைக்க கிடைத்த இந்த வாய்ப்பை நான் கௌரவமாக கருதுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோயின் பாதிப்பை கணிசமாக குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தில் பெண்கள் மத்தியில் புற்றுநோய்க்கான இரண்டாவது முதன்மை காரணமாக இது இருக்கிறது. எனினும், இது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படக்கூடிய ஒரு பாதிப்பாகும். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவது, ஸ்க்ரீனிங் சோதனைகள் மற்றும் தடுப்பூசி மருந்து ஆகியவற்றின் வழியாக இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியும். இத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுவதற்கு வெகு ஆர்வத்தோடு பணியாற்றியிருக்கின்ற காவேரி மருத்துவமனை நிர்வாகத்தையும் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குழுவையும் நான் பாராட்ட விரும்புகிறேன். பெண்களுக்கு உதவுவதற்காக சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னேற்ற நடவடிக்கையாக இது இருப்பதால், அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். சிறந்த விளைவுகள் இதனால் எட்டப்படும் என்று நான் நம்புகிறேன் மற்றும் அதற்காக இத்திட்டத்துடன் தொடர்புடைய அனைவரையும் வாழ்த்துகிறேன்.” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிதல் மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர்களது உடல் ஆரோக்கியத்தை தீவிர முனைப்புடன் கவனித்துக் கொள்வதற்கான அறிவையும், ஆதாரவளங்களையும் கொண்டவர்களாக பெண்களை திறனதிகாரம் பெறச்செய்வதே எமது செயல்திட்டம். விழிப்புணர்வை அதிகரிப்பதன் வழியாகவும், ஸ்க்ரீனிங் சேவைகளை பெறுவதற்கான வசதிகளை ஏதுவாக்குவதன் வழியாகவும், தமிழ்நாட்டில் கருப்பை வாய் புற்றுநோய் என்ற பெரும் சுமையை நம்மால் கணிசமாக குறைக்க முடியும். எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற முடியும்.” என்று அவர் கூறினார்.
சமூக அளவில் இலவசமாக வழங்கப்படும் கருப்பைவாய் புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டமானது, இப்பாதிப்பு வராமல் முன்தடுப்பது மற்றும் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை நோக்கமாக கொண்டிருக்கிறது; அதுமட்டுமன்றி, அவர்களது ஆரோக்கியத்தை அவர்களே பிரத்யேக அக்கறையுடன் கவனித்துக் கொள்வதற்கான அறிவும், ஆதாரவளங்களும் கொண்டவர்களாக ஆக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இப்பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் ஸ்க்ரீனிங் சேவைகளுக்கான வசதிகளை ஏதுவாக்குவதன் வழியாக இப்பிராந்தியத்தில் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றவும், இதனால் ஏற்படும் பொருளாதார சுமையைக் குறைக்கவும் இயலவும் என்று காவேரி மருத்துவமனை உறுதியாக நம்புகிறது.
கருத்துகள் இல்லை