ஹனுமான் ( Hanuman) திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் ஃபேண்டஸி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன அந்த வரிசையில் ஹனுமான். நடிகர் தேஜாசஜ்ஜா , வரலட்சுமி சரத்குமார், அமிர்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் வர்மா.
சின்னச் சின்ன திருட்டுகள் செய்துவரும் நாயகன் தேஜாசஜ்ஜா, தனது சகோதரி வரலட்சுமியுடன் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார்.
திடீரென ஒருநாள் அதீத சக்தி கிடைக்கிறது. அதை வைத்து ஊர் மக்களுக்கு நல்லது செய்வார் என்பது கடவுளின் திட்டம். அந்தச் சக்தியை அவரிடமிருந்து தனக்காகப் பயன்படுத்திக் கொள்வது வில்லன் வினய்யின் திட்டம்.
கடவுள் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்து அந்த சக்தியைக் கொடுதார்? அதன் விளைவுகள் என்னென்ன? வினிய்யின் எண்ணம் ஈடேறியதா? என்பனவற்றுக்கான விடைகள்தாம் ஹனுமான்.
நாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா, அனுமந்த் கதாபாத்திரத்துக்கு மிகப்பொருத்தமானவராகத் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.இதுவரை தெலுங்கு கதாநாயகர்கள் செய்த, ஒற்றைவிரலால் தொடரியை நிறுத்துவது உள்ளிட்ட நம்பமுடியாத சண்டைக்காட்சிகளை நகலெடுத்துச் செய்து அரங்கை அதிரவைக்கிறார்.காதல், பாசக்காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கிறார் அமிர்தா ஐயர். தொடக்கத்தில் அவரை நன்றாகப் பயன்படுத்திவிட்டு கொஞ்ச நேரத்தில் வழக்கமான நாயகிகள் போல் ஆக்கிவிட்டார்கள்.
நாயகனின் சகோதரியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். சாதாரணமாக இருக்கும் இந்த வேடத்துக்கு இவர் எதற்கு? என்று நினைக்கும்போதே அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவரும் நன்றாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் வினய், அலட்சியத் தோரணையைச் சரியாக வெளிப்படுத்தி ஏற்றுககொண்ட வேடத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.
நகைச்சுவைக்கு வெண்ணிலா கிஷோர். பெயரளவில் இல்லாமல் செயலிலும் வெளிப்படுத்திச் சிரிக்க வைத்திருக்கிறார்.
சமுத்திரக்கனிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம்.அவர் அதற்கு நியாயம் செய்துவிட்டார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை..
ஒளிப்பதிவில் பல வித்தைகள் செய்ய ஏதுவான கதை.அதைச் சரியாகப் பயன்படுத்தி தானும் நற்பெயர் பெற்று இரசிகர்களுக்கும் நல்ல காட்சியனுபவம் கொடுத்திருக்கிறார் தாசரதி சிவேந்திரன்.
இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையும் காட்சிகளைப் பெரிதுபடுத்தியிருக்கிறார்.
ஆன்மீகம் பேசும் படம் என்றாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரசாந்த் வர்மா மற்றும் ஸ்கிரிப்ட்ஸ்வில்லே கதை எழுதியுள்ளனர்.
பக்திப்படம் என்கிற தோற்றத்திலும் பெயரிலும இருக்கும இப்படத்துக்குள் கேலி, கிண்டல், எள்ளல் ஆகிய எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார். அதற்காகவே ஒரு கற்பனை கிராமத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா.
ஹனுமானின் சக்தி என்ன என்று இப்படத்தின் மூலம் நாம் உணர்கிறோம்.
திரைப்படம் குழந்தைகளுக்கு மிகப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை