சற்று முன்



மாதவிடாய் நின்றுவிட்ட 50 வயதான யோனி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மறுவாழ்க்கை தந்திருக்கும் அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் !

மாதவிடாய் நின்றுவிட்ட 50 வயதான யோனி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மறுவாழ்க்கை தந்திருக்கும் அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் 

கோயம்புத்தூர்: செப்டம்பர் 25, 2023: – கோயம்புத்தூரைச் சேர்ந்த அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் (AOI), மாதவிடாய்க்குப் பிந்தைய நிலையில் இரத்தப்போக்கு மற்றும் யோனியிலிருந்து திரவ வெளியேற்றத்தால் 50 வயதான பெண்ணின் உயிரை, நவீன சிகிச்சையின் மூலம் காப்பாற்றியிருக்கிறது.  பெண் பிறப்புறுப்பு / யோனியில் புற்றுநோய் இருப்பது இப்பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.  இப்பாதிப்பு மருத்துவ நிலை FIGO II என வகைப்படுத்தப்பட்டிருந்தது.  நீரிழிவு பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டிருப்பினும் கூட, குறிப்பிடத்தக்க வலி எதுவும் இவருக்கு இருக்கவில்லை; அத்துடன் ஏறக்குறைய இயல்பான மலம் மற்றும் சிறுநீர் கழிப்பு வழக்கங்களும் இவருக்கு இருந்திருக்கின்றன.  

இப்பெண்ணை பரிசோதித்தபோது, இவரது மேற்புற மற்றும் நடுப்புற யோனியின் முன்புற சுவரில் தொட்டு உணரக்கூடியவாறு கடினமான, தடித்த வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டது.  அதைத்தொடர்ந்து செய்யப்பட்ட பயாப்சி (திசு ஆய்வு) முடிவுகள், மிதமான வேறுபடுத்தப்படுகின்ற திரள்செல் புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டினர்.  பெட் – சிடி மற்றும் கூடுதல் இரத்தப் பரிசோதனைகளும், யோனியின் மேற்புற மற்றும் நடுப்பகுதியில் 3.5 செ.மீ. நீளம் மற்றும் 1.5 செ.மீ. அடர்த்தி அளவு கொண்ட மென் திசு தடிமன் பாதிப்பு இருப்பதை வெளிப்படுத்தின.  எனினும், அதைச் சுற்றியுள்ள சிறுநீர் பை, சிறுநீர் குழாய் அல்லது மலக்குடல் ஆகியவற்றில் புற்று பாதிப்பு ஊடுருவல் இல்லை என்பதும் மற்றும் நிணநீர் முடிச்சுகள் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்பட்டிருந்தன என்பதும் கண்டறியப்பட்டது.  

இந்நபருக்காக வடிவமைக்கப்பட்ட சிகிச்சை திட்டத்தில் கதிரியக்க சிகிச்சை (வெளியார்ந்த அலைக்கற்றை கதிர்வீச்சு) மற்றும் பிராச்சிதெரபி ஆகியவற்றோடு இணையாக கீமோதெரபியையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு விரிவான அணுகுமுறை இடம்பெற்றிருந்தது .  கோயம்புத்தூரில் உள்ள AOI – ல், ட்ரூபீம் STx LINAC என்ற சாதனத்தைப் பயன்படுத்தி இந்த சிகிச்சை வழங்கப்பட்டது.  சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு குறிப்பாக, சிறுநீர்க்குழாய் மற்றும் மலக்குடல் ஆகியவற்றிற்கு கதிர்வீச்சு பாதிப்பு அதிகம் இல்லாதவாறு மிகத்துல்லியமான திட்டமிடலோடு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  

கோயம்புத்தூர், அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் – ன் புற்றுநோய்க்கான கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். சி. அன்பு இது குறித்து பேசுகையில், “யோனி புற்றுநோய் (Carcinoma Vagina) என்பது, ஒரு அரிதான பெண் பிறப்புறுப்பு சார்ந்த புற்றுநோயாகும்.  பெண் பிறப்புறுப்பில் காணப்படும் அனைத்து புற்றுநோய்களிலும் இதன் பங்கு 3% - க்கும் குறைவாகவே இருக்கிறது. காளப்புற்று (அடினோகார்சினோமா) என்பதையடுத்து யோனி புற்றுநோயில் ஏறக்குறைய 80% பங்கினை திரள்செல் புற்று (ஸ்குவாமஸ் செல் கார்சினோமா) கொண்டிருக்கிறது.  கருப்பை வாய் புற்றுநோயைப் போலவே அதிக இடருள்ள மானுட பாப்பிலோமா வைரஸ் தொற்று (HPV வகை 16, 18) என்பது, யோனி புற்றுநோய் உருவாவதற்கு பெரிய அளவிலான இடர்காரணியாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.  மலக்குடல் மற்றும் சிறுநீர் பை போன்ற அமைப்புகளுக்கு மிக நெருக்கமாக யோனி இருப்பதன் காரணமாக, அறுவைசிகிச்சையோடு ஒப்பிடுகையில், கதிர்வீச்சு சிகிச்சையானது, உறுப்புகளை அகற்றாமல் தக்கவைப்பதற்கு உதவுகிறது;  அத்துடன், புற்றுக்கட்டி மீதான கட்டுப்பாடும் மற்றும் உயிர் வாழும் நல்ல விகிதாச்சாரமும் இதனால் சாத்தியமாகிறது.  இந்த சிகிச்சை செயல்முறை நெடுகிலும் எமது நோயாளியின் பாதுகாப்பும், நலவாழ்வுமே முதன்மை முக்கியத்துவம் பெற்றதாக இருந்தன.  மேம்பட்ட, நவீன உத்திகளைப் பயன்படுத்தி, 28 பின்னங்களில் 50.4 Gy கதிர்வீச்சு மருந்தளவை வழங்குவதன் மூலம், மிகக் குறைவான பக்க விளைவுகளுடன் சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை விளைவுகளைப் பெறுவதே எங்களது நோக்கமாக இருந்தது.” என்று கூறினார். 

இச்சிகிச்சைக்கு சிறப்பான ஏற்புநிலையையும், தாக்குப்பிடிக்கும் திறனையும் இந்நோயாளி வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  இதனால், கதிர்வீச்சால் தூண்டப்படும் பக்கவிளைவுகள் மிக மிக குறைவாகவே இருந்தன.  வெளியார்ந்த அலைக்கற்றை கதிர்வீச்சு சிகிச்சை நிறைவடைந்ததிலிருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ மதிப்பாய்வில் குறிப்பிடத்தக்க, தடிமனான நைவுப்புண்கள் எதுவும் காணப்படவில்லை.  சிகிச்சைக்கு ஆரம்ப நிலையிலான நேர்மறை பதில்வினைகளே அதில் தெரிய வந்தன.  இதைத்தொடர்ந்து, இந்நோயாளிக்கு மூன்று அமர்வுகளில் இன்ட்ராகேவிட்டரி இமேஜ் வழிகாட்டலுடன் கூடிய வஜினல் சிலிண்டர் பிராச்சிதெரபி  வழங்கப்பட்டது.  கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிந்தைய முதல் பின்தொடர் வருகையின்போது, எந்த நச்சுத்தன்மை விளைவுகளும் அவரிடம் தென்படவில்லை.  மேலும் சௌகரியமாக இருப்பதாகவும் அப்பெண்மணி தெரிவித்தார்.  யோனி புற்றுநோய் பாதிப்பு இருந்ததற்கான எந்த சான்றும் அதற்குப் பின் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தென்படவில்லை.  

அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் – ன் கோயம்புத்தூர் மண்டல இயக்குனர் திரு. கிருஷ்ண தாஸ் பேசுகையில், “புற்றுநோய்க்கு துல்லியமான சிகிச்சையை வழங்கும் செயல்பாட்டில் தொழில்நுட்ப மேம்பாடுகளையும், நவீன சாதனங்களையும் திறம்பட பயன்படுத்துவதில் AOI – ல் நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம்.  பெருமிதப்படக்கூடிய இந்த வெற்றிகரமான நிகழ்வு, நோயாளியின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதே தருணத்தில் மிக நவீன சிகிச்சைகளின் மூலம் குணமளிப்பது மீதான எமது அர்ப்பணிப்பை வலுவாக கோடிட்டுக் காட்டுகிறது” என்று கூறினார். 

யோனி புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில், உறுப்புகளை அகற்றுவதோ, சேதப்படுத்துவதோ இல்லாமல், அவற்றை ஆரோக்கியமாக தக்கவைப்பது மீது உறுதியான கூர்நோக்கத்துடன் வழங்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையின் பயனளிப்பையும், பாதுகாப்பையும் இந்நோயாளிக்கு வழங்கப்பட்ட சிகிச்சையும், அதன் சிறப்பான பலனும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. புற்றுநோய்க்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதில் AOI – கோயம்புத்தூர் மருத்துவ மையத்தின் திறனுக்கும், பொறுப்புறுதிக்கும் ஒரு நல்ல சாட்சியமாக இது இருக்கிறது. 


கருத்துகள் இல்லை