மகத்தான கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் !
மகத்தான கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் !
முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது.
“தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
LGM திரைப்படம் காமெடிக் காட்சிகள் நிறைந்த குடும்பத்தோடு கண்டு ரசிக்கக் கூடிய ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நாயகன் நாயகியாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரத்தில் நதியா, யோகி பாபு மற்றும் ”மிர்ச்சி” விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கி இருப்பதோடு, இசையும் அமைத்திருக்கிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இப்படத்தின் தயாரிப்பாளருமான தோனி பேசும் போது, நான் இப்படத்தைப் பார்த்து விட்டேன். இது மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. நான் என் மகளோடு அமர்ந்து இப்படத்தைப் பார்த்தேன். அவள் என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டாள். அவளுக்கும் படம் பிடித்திருக்கிறது. இது ஒரு ஜாலியான திரைப்படம். மொத்தத்தில் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
எனக்கு என் தயாரிப்பு அணியை பார்க்கும் போது பலம் வருவது போல் உணர்கிறேன். அவர்கள் இந்த தயாரிப்புப் பணியை கையாண்ட முறையைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியும் ஒரு கட்டிடக்கலை நிபுணர் தான். என் மனைவி என்னிடம் படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்ன போது, நான் அவளிடம் சொன்னது ஒன்று தான். படத் தயாரிப்பு என்பது நீ நினைப்பது போல் வீட்டு சுவருக்கு வெள்ளையடிக்கின்ற விசயம் இல்லை. நீ முதலில் ஒரு கலர் அடிப்பாய், பின்னர் அது நன்றாக இல்லை என்று வேறு கலர் அடிப்பாய். பின்னர் தான் தோன்றும் முதல் கலரே இதைவிட நன்றாக இருந்தது என்று. பின்னர் நீ மீண்டும் முதல் கலரையே அந்த சுவற்றுக்கு அடிப்பாய். படத் தயாரிப்புப் பணியில் அப்படி செய்ய முடியாது. கதை என்ன, யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை நீயே முடிவு செய். இதை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பின்னர் எதைப் பற்றியும் யோசிக்காதே, அந்த வேலையை தொடங்கிவிடு, மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று சொன்னேன். படக்குழுவினர் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்திருப்பதற்கு அதுவும் முக்கியமான ஒரு காரணம்.
நான் என் குழுவினரிடம் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கும்படி கூறினேன். அது உணவு. நடிகர்களுக்கான உணவோ, அல்லது மொத்த படக்குழுவினருக்கான உணவோ, யாருக்கான உணவாக இருந்தாலும் அது உயர்ந்த தரமான உணவாக இருக்க வேண்டும் என்பது தான். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போதும் எதிர்பார்ப்பது நல்ல தரமான உணவு மட்டும் தான்.
சாக்ஷி இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார், அதன் பின், இப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம்.
எனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டு. என்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் சென்னையில் தான், நான் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்ததும் சென்னையில் தான். நினைத்துப் பார்த்து சந்தோஷப்படும் பல சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது. தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. மேலும், தமிழ் நாடு என்னை தத்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நாங்கள் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு பின்னர் சாம்பியன் ஆனது மறக்க முடியாத தருணம். நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது. இதெல்லாம் தான் இப்படத்தை தமிழில் தயாரிக்க காரணம்.இப்படம் வெகு சீக்கிரத்தில் வெளியாக இருக்கிறது. மிகவும் ஜாலியான திரைப்படமாக இது இருக்கும். மூன்று நபர்களுக்கு இடையேயான சமன்பாடு தான் இத்திரைப்படம். அந்த மூவர் மகன், மருமகள், மாமியார், அம்மா மற்றும் மனைவிக்கு நடுவில் ஷாண்ட்விச் போல் மாட்டிக் கொண்டவர் தான் மகன். இதைத்தான் இப்படம் கலகலப்பாக பேசுகிறது.
சாக்ஷி தோனி பேசியபோது,
இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் மற்றும் எங்களுக்கு தெரிந்த பல பேரின் வாழ்க்கையில் இப்படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருக்கிறது. அப்பொழுது தான் தோன்றியது ஏன் இதை ஒரு படமாக எடுக்கக்கூடாது என்று. இப்படித் தான் இப்படம் உருவானது.
இதனை தமிழில் எடுப்பதற்கு மிக முக்கியக் காரணம் என் கணவர் தோனி தான். நாங்கள் எல்லோருமே தமிழில் படத் தயாரிப்பு தொடங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தோம். ஏனென்றால் முதல்முறையாக படத் தயாரிப்பில் இறங்கும் போது ஒரு மிகப்பெரிய சப்போர்ட் வேண்டும். இது போன்ற ஒரு சிறப்பான துவக்கத்திற்கு சென்னை சரியான இடமாக இருக்கும் என்று தோன்றியது.
இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி பேசியபோது,
”முதலில், தோனி சார் மற்றும் சாக்ஷி தோனி மேடமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாக்ஷி மேடம் தான் எனக்கு இந்த அருமையான கதைக் கருவை கொடுத்தார். அதன்பின் நாங்கள் இதுகுறித்து நிறைய விவாதித்து இக்கதையை உருவாக்கினோம். எனக்கு இந்த படக்குழு ஒரு குடும்பம் போல் இருந்த காரணத்தால், நான் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் படத்தில் வேலை செய்தேன். எனக்கு கிடைத்த இந்த சிறப்பான குழுவுக்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன். LGM ஒரு ஜாலியான திரைப்படம்.
இப்படத்தின் உருவாக்கத்தில் எனக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படவில்லை. இப்படம் உலகமெங்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையைப் பேசுகிறது. எல்லோருமே இதை அனுபவித்து இருப்பார்கள்.சாக்ஷி தோனி மேடம் மருமகளும் மாமியாரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் போகிறார்கள் என்று ஒரு அற்புதமான ஐடியாவை எங்களுக்குக் கொடுத்தார்கள். இப்பட உருவாக்கத்தின் போதே சாக்ஷி தோனி மேடம் எங்களுடனேயே இருந்து எல்லா காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நாங்கள் மூன்று நான்கு முறை இக்கதையை திருத்தி எழுதினோம். ..
தோனி சார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து தேவைப்படும் ஆலோசனைகளை வெளியில் இருந்தே கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும் முடிவைப் பற்றி கவலைப்படாதிருங்கள். ஆனால் உங்கள் செயல் திட்டங்களில் முழு கவனத்தோடு இருங்கள் “Dont worry about the result, Follow the process” என்று ஊக்குவித்தார்” என்று பேசினார்.
நடிகை நதியா பேசியபோது,
”அனைவருக்கும் வணக்கம்! தோனி கம்பெனியில் இருந்து அழைப்பு வந்த போது, பெண்களின் கிரிக்கெட் பிரிமியர் லீக்-காக தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். தோனி படம் எடுக்கிறார் என்பது ஆச்சர்யமாக தான் இருந்தது. ஒரு வேளை இது ப்ராங்க் போன்காலாக இருக்குமோ என்று கூடத் தோன்றியது. நான் அதிகமாக கிரிக்கெட் விளையாடும் ஒரு குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்தவள், என் கணவரின் உறவினர்கள் பலர் கிரிக்கெட் விளையாடுபவர்கள். பல கோடி மக்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு நபராக வழிகாட்டியாக இருந்து வரும் தோனி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
LGM ஒரு ஜாலியான படம், இப்படம் உறவுகளை பற்றி பேசும். இப்படம் எல்லா உறவுகளுக்கும் ஒரு பாசிட்டிவ்-வான எனர்ஜியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி மிகச்சிறப்பான திறமை வாய்ந்தவர். அது போல் இப்படத்தின் கதைக்கரு மிகவும் தனித்துவம் வாய்ந்த்து. அதற்காக சாக்ஷி தோனிஷி அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ” என்று பேசினார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியபோது,
”இப்படத்தை பற்றி பேசும் முன், தோனி சாருக்கு நன்றி. நீங்கள் இந்த ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்று கொடுத்ததற்காக மட்டும் நான் நன்றி சொல்லவில்லை. எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் பலமுறை நினைத்துப் பார்க்கும்படியான பல அற்புதமான தருணங்களை எங்களுக்கு கொடுத்திருப்பதற்காகவும் நன்றி. நாம் உங்கள் தலைமையில் கோப்பையை வெல்வது அடுத்த ஆண்டும் தொடரும் என்று நம்புகிறேன்.
சாக்ஷி தோனிஷி மேடம் இந்தப் படத்திற்காக கொடுத்த கதைக்கரு மிகவும் வித்தியாசமான ஒன்று. இந்தப் படத்தை எல்லா ஆடியன்ஸும் அவர்களோடு எளிதாக தொடர்புபடுத்திக் கொள்வார்கள். இது உலகத்தில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையைப் பேசுகிறது. உலகமெங்கும் இருக்கும் எல்லா குடும்பத்தினரும் இப்படத்தை எளிதாக தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு அற்புதமான கதைக்கருவை கொடுத்ததற்காக நான் ஷாக்ஷி மேடத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்படத்தின் மூலமாக எனக்கு ஒரு புதிய சகோதரர் கிடைத்திருக்கிறார் அவர் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி தான்.
எம்.குமரன் படத்தில் நதியா மேடத்தை பார்த்த பிறகு, நான் என் அம்மாவிடம் சென்று நான் நதியா அவர்களை அம்மா என்று அழைக்கலாமா என்று கேட்டுள்ளேன். அந்த அளவிற்கு எனக்கு அவரை பிடிக்கும். அவரோடு நடிக்க எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் மிகப்பெரிய பெருமையாக நினைக்கிறேன். அதுபோல் இவானா அவர்களோடு நடித்ததும் நல்ல அனுபவம். அவர் மிகச்சிறந்த நடிகை.
இப்படத்தில் காமெடிக் காட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் இவற்றையெல்லாம் தாண்டி மிகத் தனித்தன்மைவாய்ந்த ஒரு விசயம் இருக்கிறது. உங்கள் குடும்பத்தினை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அது கடவுள் நமக்குக் கொடுக்கும் அன்புப் பரிசு. அப்படி எல்லா குடும்பத்தையும் ஒன்று சேர்க்கும் ஒரு விசயம் இப்படத்தில் இருக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் படம் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள்.
நான் இயக்குநரிடம் தோனி சார் படத்தைப் பார்த்துவிட்டாரா..? என்ன சொன்னார் என்று கேட்டேன். அதற்கு அவர் தோனி சார், , “நாம் செய்த வேலையை முதலில் நாம் நேசிக்க வேண்டும், நாம் செய்திருக்கும் இந்த வேலை எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கூறினார் என்றார். அதுவே எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. எங்களுக்குப் பிடித்த இப்படம் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.” என்று பேசினார்.
நடிகை இவானா பேசியபோது,
”இப்படத்தை தோனி சார் தமிழில் தயாரிக்க முடிவு செய்ததால் தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் நானும் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. தோனி சாரை “கேப்டன் கூல்” என்போம், அவரை போல் தான் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியும் கூலான மனிதர் தான். ஒரு இயக்குனர் இவ்வளவு பொறுமையாக இருப்பாரா என்று ஆச்சர்யமாக இருந்தது. இப்படத்தில் நான் இருக்கிறேன் என்கின்ற எண்ணமே பெருமையாக இருக்கிறது.” என்று பேசினார்.
விகாஸ் அசிஜா பேசுகையில்,
”இப்படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம். என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரும் பொறுப்பை ஒப்படைத்த, தோனி சார் மற்றும் சாக்ஷி தோனி மேடமுக்கு நன்றி.” என்று பேசினார்.
நடிகர் யோகி பாபு பேசியபோது,
” கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருக்கும் எம்.எஸ்.தோனி அவர்கள் தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். தோனி மற்றும் சாக்ஷி மேடத்துக்கு எனது நன்றி. முதலில் இயக்குநர் ”தோனி எண்டர்டெயின்மெண்ட் ”நிறுவனத்திற்காக தான் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது, நான் ஏதோ கிண்டல் செய்கிறார் என்று நினைத்தேன். பின்னர் தான் அவர் சொல்வது உண்மை என்பதே எனக்குப் புரிந்தது.
படத்தில் நதியா மேடம், ஹரிஷ் கல்யாண் போன்றோர் நடிப்பதால் மூவருக்குமான காட்சிகளில் சேர்ந்து நடிக்கும் போது தேதிகளில் குழப்பம் ஏற்படும் என்னால் தேதி ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லையே என்று சொன்னதற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, நீங்கள் இப்படத்தில் நடிக்க தேதி கொடுத்தால் நான் தோனி கையெழுத்துப் போட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை உங்களுக்கு வாங்கித் தருவேன் என்றார். நான் உடனே என் மேனேஜரைக் கூப்பிட்டு இவர் என்ன தேதி கேட்டாலும் கொடு என்று சொல்லிவிட்டேன்.
ஹரிஷ் கல்யாண், நதியா மேடம், இவானா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தோனி சார் ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸ் அடிப்பது போல், வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.
எங்கள் அனைவரையும் மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டதோடு இயக்குனர் ரமேஷ் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்து சிறப்பாக கவனித்துக் கொண்ட தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
“சக்தி பிலிம் பேக்டரி” சக்திவேலன் பேசியபோது,
தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான ஒரு படத்தை, நான் விநியோகம் செய்கிறேன் என்பதை விட எனக்கு மகிழ்ச்சியான விஷயம் வேறு ஏதும் இல்லை.
இப்படத்தின் முதல் 40 நிமிடத்தை நான் ரீ-ரெக்கார்டிங் செய்யும் முன்பு பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 10-12 நிமிடங்கள் நான் அந்தக் காட்சியை நினைத்து சிரித்துக் கொண்டே இருந்தேன். காமெடி காட்சிகள் அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது.
இயக்குனர் ரமேஷ் எனது நண்பர் அவரின் மூலமாக தான் இப்படத்தை விநியோகம் செய்ய அணுகினேன். அப்போதே அவர் ஒப்புதல் தெரிவித்தார். இப்படம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு திரைப்படமாக இருக்கும். என்று பேசினார்.
படத்தின் இணை தயாரிப்பாளரான ஷர்மிளா J ராஜா கூறுகையில்..,
" இந்த திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது ஒரு பெரிய பாக்கியம்”. என்று பேசினார்.
மிர்ச்சி விஜய் பேசியபோது,
இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த, தோனி சார் மற்றும் சாக்ஷி தோனி அவர்களுக்கு நன்றி. இந்த படக்குழுவில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. இப்படக்குழு மிக அற்புதமான ஒரு படக்குழு. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்தபோது, யோகி பாபு அண்ணன் எங்களுக்காக பல வசனங்கள் கொடுத்து உதவினார். அவருக்கு நன்றி.
இந்தப்படம் அமைந்தது எனது வாழ்க்கையை மாற்றிய ஒரு தருணம் என்று தான் நம்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில், தோனி என்டர்டெய்மென்ட் தயாரிப்பு குழு எங்களை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். தினமும் “தோனி சார் உங்களை மகிழ்ச்சியாக வேலை செய்ய சொல்லியிருக்கிறார்” என்று கூறி ஊக்குவிப்பார்கள். மேலும், கடைசி நாளின் போது, நாங்கள் உங்களை சிறப்பாக கவனித்தோமா? ஏதேனும் குறை உள்ளதா? என்று ஒரு படிவத்தைக் கொடுத்து விசாரித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு எங்களை பாசத்தோடு பார்த்துக் கொண்டார்கள். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி.” என்று பேசினார்.
கருத்துகள் இல்லை