இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன் !
இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்
பிரபாஸ்- தீபிகா படுகோன் நடிக்கும் “ புராஜெக்ட் கே” படத்தில் முக்கிய வேடத்தில் உலக நாயகன் கமல்ஹாசன்*
இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான 'புராஜெக்ட் கே' அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. மொத்த இந்திய ரசிகர்களாலும் கொண்டாடப்படும் இப்படத்தில் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள்.
தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது, மிகப்பெரும் ஆச்சர்ய தகவலாக, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைவது இறுதியான நிலையில் இந்திய திரையில் மிகப்பெரும் நட்சத்திர ஆளுமைகள் பங்கேற்கும் படைப்பாக இப்படம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்.. , “50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் இருந்தபோது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் மிகப்பெரிதாக இருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் இணைகிறோம். நம் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த இயக்குநர் இதில் தலைமை வகிக்கிறார். என்னுடைய சக நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய இந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதற்கு முன் அமித் ஜியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை முதல் முறை போலவே உணர்கிறேன்.
இப்போதும் அமித் ஜி ஒவ்வொரு படத்திலும், தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரது பாதையை தான் நானும் பின்பற்றுகிறேன். ’புராஜெக்ட் கே’ படத்தில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். திரையுலகில் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும், பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்து பார்த்தாலும், என்னுடைய முதன்மையான தன்மை, நான் ஒரு திரைப்பட ஆர்வலன் என்பதே. அனைத்து புது முயற்சிகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக அங்கீகரிப்பார்கள். ’புராஜெக்ட் கே’ படத்திற்கு இது என்னுடைய முதல் கைதட்டலாக இருக்கட்டும். எங்கள் இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில், ரசிகர்கள் மத்தியிலும் சினிமா உலகிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
கமல்ஹாசன் இப்படத்தில் இணைவது குறித்து, தயாரிப்பாளர் அஸ்வனி தத் பகிர்ந்து கொண்டதாவது..,
“எனது திரைப்பயணத்தில், மிக நீண்ட காலமாக, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது கனவாக இருந்தது. ‘புராஜெக்ட் கே’ மூலம் இப்போது அந்த கனவு நனவாகியுள்ளது. இரண்டு பழம்பெரும் நடிகர்கள் திரு. கமல்ஹாசன் மற்றும் திரு. அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு தயாரிப்பாளருக்கும் வாழ்வின் மிகச்சிறந்த தருணமாகும். எனது திரை வாழ்க்கையின் 50வது ஆண்டில் இது உண்மையிலேயே எனக்கு கிடைத்த மிகப்பெரும் ஆசீர்வாதம்.”
இயக்குநர் நாக் அஸ்வின், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தின் நடிகர்களுடன் இணைந்தது குறித்து பேசுகையில்,
“திரையுலகின் வரலாற்று சிறப்பு மிக்க வேடங்களில் நடித்துள்ள கமல் சார், இது போன்ற புதிய முயற்சியில் எங்களுடன் இணைவது மிகப்பெரிய கவுரவம். அவர் இப்படத்தில் இணைந்தது, எங்களுக்கு கிடைத்த பாக்கியம். எங்கள் முழு குழுவினரையும் இந்த செய்தி பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘புராஜெக்ட் கே’ பன்மொழிகளில் தயாராகும் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாகும். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு வரலாற்றில் அவர்களின் ஐம்பது புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்யும் வகையில், மிகப்பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.
கருத்துகள் இல்லை