சற்று முன்



இளையராஜாவை விமர்சிக்க அருகதை வேண்டாமா? ஜேம்ஸ் வசந்தன் மன்னிப்பு கேட்க வேண்டும்!



இளையராஜாவை விமர்சிக்க அருகதை வேண்டாமா? 

ஜேம்ஸ் வசந்தன் மன்னிப்பு கேட்க வேண்டும்!

திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் ஆவேசம்!!

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான "நினைவெல்லாம் நீயடா" படத்தை எழுதி இயக்கி வரும் ஆதிராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தன்னை இசையமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்ளும் ஜேம்ஸ் வசந்தன் என்பவர் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், இசைஞானி இளையராஜாவை பற்றி மிகவும் மட்டமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். இசைஞானி இந்தியாவின் அடையாளம்.  சிறந்த ஆன்மிகவாதி. உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களில் 9 வது இடம் பிடித்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.  இளையராஜாவுக்கு நிகராக இன்னொருவர் பிறக்கவும் முடியாது

 இசையில் சிறக்கவும் முடியாது. உலகமே கொண்டாடும் ஒரு இசைஞானியை ஒரு மிகச் சாதாரணமான... மறைமுகமாக ஊழியம் பார்த்து வயிறு வளர்த்து கொண்டிருக்கும் நாகரீகமற்ற ஜேம்ஸ் வசந்தன், மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி மத அரசியல் செய்யும் நோக்கத்துடன் விமர்ச்சித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. சென்னையைத் தாண்டினால் யார் என்றே தெரியாத இவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாய்க்கொழுப்பின் வெளிப்பாடு. அவர் பயன்படுத்திய வார்த்தைகளை கவனித்து பார்த்தால் அவர் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பேட்டி எடுப்பவர்" நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?" என்று கேட்கும்  போது கூட திமிர்த்தனமாக பதில் அளித்து இருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது.... இவர் யாரோ வீசிய  எலும்பு துண்டுக்குத்  தான் குரைத்திருக்கிறார் என்பது. இளையராஜா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுபவர் என்பது உலகறிந்த விஷயம். திறமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் புகழின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் வித்யா கர்வம் இருக்கத்தான் செய்யும். உனக்கு ஏன் எரிகிறது?. குறைகுடங்கள் எல்லாம் கூத்தாடித் திரியும் போது நிறைகுடம் ததும்பினால்தான் என்ன?

 உண்மையிலேயே ஒருவரை விமர்சிக்க விரும்பினால் அடிப்படை நாகரீகம்  தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய சாதனையாளரை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இவ்வளவு மட்டமான வார்த்தைகளால் விமர்சிக்கும் உனக்கெல்லாம் பண்பாடு பற்றியும் பக்குவம்  பற்றியும் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

கோடான கோடி ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானியை இது போன்ற சில்லரைகள் சீண்டி பார்ப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியாவின் ஆகப்பெறும் அடையாளத்தை, விருதுகளுக்கெல்லாம் பெருமை சேர்த்த ஒரு மாமனிதரை... அவர் வாழும் காலத்திலேயே அசிங்கப்படுத்த நினைப்பவர்களை, என்னைப் போன்ற அவருடைய உண்மையான ரசிகர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜேம்ஸ் வசந்தன் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறு பரப்பும் வீடியோவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் இளையராஜா ரசிகர்கள், ஜேம்ஸ் வசந்தன் செல்லும் இடமெல்லாம் கூடிநின்று வசைமாரி பொழியும்  சூழ்நிலை உருவாகும்.

 தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை சங்கங்களும் இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும். ரஜினிகாந்த் கமலஹாசன் விஜயகாந்த் பாரதிராஜா பாலா வெற்றிமாறன் சசிகுமார் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வசந்தனின் வாய்க்கொழுப்பை கண்டிப்பாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆதிராஜன் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை