சற்று முன்



திரைப்பட தயாரிப்பாளர்கள் வருமானம் ஈட்ட மேலும் ஒரு வழி !

திரைப்பட தயாரிப்பாளர்கள் வருமானம் ஈட்ட மேலும் ஒரு வழி !

பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும்  ஆடைகளுக்கான‌ செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும்.

பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media) சனிக்கிழமை மாலை சென்னை ஜிஆர்டி கிராண்டில் நடத்திய ஊடக தொழில்நுட்ப மாநாட்டில் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொழில்நுட்பம், வருவாய் மேம்பாடு மற்றும் புதுமையான தொழில்முனைவு ஆகியவை திரைப்படத் துறையை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன‌ என்பதை ஆலோசிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக 'எதிர்கால மீடியா தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

வணிகத் திட்டமிடல் மற்றும் வருவாய் அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் பல சாதனைகள் படைத்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணரான சிவகுமார் ஆர், பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் தளத்தின் நிறுவனர் ஆவார்.

திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளில் இருந்து வருவாயை ஈட்டுவதற்கு முன்னணி ஆடை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்களை இணைப்பதை இத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு படத்தின் பட்ஜெட்டில் கணிசமான தொகை ஆடைகளுக்காக செலவிடப்படுகிறது. மொத்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக சுமார் 10 சதவீதம் வரை நடிகர்களின் ஆடைகளுக்கு செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

ஆடைகளுக்கு செலவழிக்கும் பணம் சினிமா துறையில் ஒரு செலவாக மட்டுமே பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதை மாற்றி அமைத்து வருவாயை உருவாக்குவதை பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்னெடுப்பின் மூலம் ஒரு திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பயன்படுத்தும் ஆடைகளின் உரிமை முன்னணி பிராண்டுகளுக்குத் தரப்படும். ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிகர்கள் பயன்படுத்தும் ஆடைகள் இந்த நிறுவனங்கள் மூலம் மக்கள் வாங்கலாம். இந்த ஆடைகளுக்கு பிராண்டுகள் ஒதுக்கும் மதிப்பீட்டு தொகை தயாரிப்பாளர்களுக்கு வருமானத்தை உருவாக்கும்.

இந்த முயற்சி தயாரிப்பாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிவகுமார் ஆர் கூறினார்.  "தயாரிப்பாளர்கள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது ஆடைகளில் பெரும் தொகையை முதலீடு செய்கிறார்கள். பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் தளத்தின் முக்கிய வேலை தயாரிப்பாளர்களுடன் முன்னணி ஆடை பிராண்டுகளை இணைப்பதாகும். தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் இந்த முயற்சியின் மூலம் பயனடைவார்கள். ஒரு படத்தில் வரும் நடிகர்களின் ஆடைகளுக்கு முன்னணி பிராண்ட்கள் நிதி வழங்கும். இதனால் தயாரிப்பாளருக்கு வருவாய் கிடைக்கும். ஒரு காலத்தில் செலவாகக் காணப்பட்ட ஆடைகள் இதன் மூலம் வருமானம் ஈட்டும் வழியாக மாறும். திரைப்படங்களை இது வண்ணமயமாக்குவதோடு வெளிப்படையான வருவாயை உருவாக்கும். ஆடை வடிவமைப்பாளருக்கு ஆன்லைன் சந்தையை ஏற்படுத்தி அவர்களின் படைப்பாற்றலுக்கான தளமாக செயல்படும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை புரொடியூசர்பஜார்.காம்  மற்றும் பெட்டர்இன்வெஸ்ட்.கிளப் உடன் இணைந்து பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் ஏற்பாடு செய்தது.

புரொடியூசர்பஜார்.காம் இணை நிறுவனர் ஜி கே திருநாவுக்கரசு கூறுகையில், "பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் இந்த முயற்சி சினிமா துறையை மேம்படுத்துவதற்கான‌ அனைத்து சாத்தியங்களையும் கொண்டுள்ளது. ஒரு திரைப்படத்தில் ஆடைகளுக்காக செலவிடப்படும் கணிசமான தொகையை இதன் மூலம் குறைக்க முடியும்," என்றார்.

பெட்டர்இன்வெஸ்ட்.கிளப் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பிரதீப் சோமு கூறுகையில், "முன்னணி பிராண்டுகளின் பங்களிப்பால், திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளின் தரம் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திரைப்படம் பார்க்கும்போது  புது அனுபவம் கிடைக்கும். ஆடைகளுக்கு தயாரிப்பாளர்கள் அதிகம்  செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால் இந்த முயற்சி அவர்களுக்கு ஊக்கமளிக்கும்," என்று தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை