இந்தியாவில் அதிகரித்து வரும் இன்ஃபுளுயன்சா தொற்றுக்கு எதிராக நம்மைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவ நிபுணர்கள் !
இந்தியாவில் அதிகரித்து வரும் இன்ஃபுளுயன்சா தொற்றுக்கு எதிராக நம்மைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவ நிபுணர்கள்
இந்தியாவில் கடந்த ஆண்டில் மாநிலங்களுள் ஃபுளூ காய்ச்சல் நேர்வுகள் எண்ணிக்கை அதிகமிருந்த இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது
இந்தியாவெங்கிலும் இன்ஃபுளூயன்சா பாதிப்புகள் உயர்ந்து வரும் பிரச்சனையை எதிர்கொள்ள இத்தொற்றுக்கு எதிராக பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்தடுப்பு நடவடிக்கை மீது சென்னையில் ஒரு வட்டமேஜை நிகழ்வை அபாட் நிறுவனம் நடத்தியது
சென்னை: மார்ச் 21, 2023: நாடெங்கிலும் இன்ஃபுளூயன்சா தொற்று நேர்வுகள் கணிசமாக அதிகரித்து வரும் பிரச்சனையை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார தகவல் தளத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 9-ம் தேதி வரையிலான காலஅளவின்போது கடுமையான சுவாசப்பாதை சுகவீனம் அல்லது இன்ஃபுளூயன்சா போன்ற நோய் பாதிப்பு அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு மில்லியன் என்ற அளவை என்ற அளவை எட்டியிருக்கிறது. இக்காலஅளவின்போது, இன்ஃபுளூயன்சாவின் பல்வேறு துணை வகைகள் இருந்தது ஆய்வகங்களால் உறுதிப்படுத்தப்பட்ட 3000-க்கும் அதிகமான நேர்வுகளில் மூலம் தெரிய வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஃபுளூ காய்ச்சல் நேர்வுகளும் வழக்கத்தை விட அதிகமாகவே வளர்ச்சியினை பதிவு செய்திருக்கின்றன. 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏறக்குறைய 16 மடங்கு அதிகரிப்பு இருந்தது அறியப்பட்டிருக்கிறது.
பருவகால இன்ஃபுளூயன்சா ஒரு பொது சுகாதார பிரச்சனையாக இருப்பதால், இந்தியாவில் ஃபுளூ காய்ச்சல் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம். இன்ஃபுளூயன்சா தொற்று வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு சுகாதார பராமரிப்பு மற்றும் மருந்துகள் தயாரிப்பில் உலகளவில் முதன்மை வகிக்கும் அபாட் நிறுவனம் ஒரு வட்டமேஜை நிகழ்வை சென்னை மாநகரில் நடத்தியது. தங்களையும் மற்றும் தங்களது குடும்பங்களையும் மற்றும் சமூகத்தையும் இத்தொற்று எதிராக எப்படி பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து மக்களுக்கு தெளிவான தகவலைத் தெரிவித்து விழிப்புணர்வை உயர்த்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
சென்னை, அப்போலோ மருத்துவமனையின் தொற்றுநோய்கள் துறையின் முதுநிலை நிபுணரும், கேப்ஸ்டோன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கின் மருத்துவ இயக்குனருமான மருத்துவர் வி. ராமசுப்ரமணியன் இந்த வட்டமேஜை நிகழ்வில் தெரிவித்ததாவது: “இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இன்ஃபுளூயன்சா நேர்வுகளில் தமிழ்நாடு மாநிலம் எண்ணிக்கை அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதுவும் 2023 ஜனவரி மாதத்தில் இது மிக அதிகமாக இருந்தது. இன்ஃபுளூயன்சா பற்றி சரியாகப் புரிந்துகொள்வதும் மற்றும் இந்த பருவகால தொற்று, அதன் சிக்கல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான முன்தடுப்பு நடவடிக்கைகளை அறிந்திருப்பதும் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் இன்ஃபுளூயன்சா மரபு வகைகள் மாற்றம் கண்டு வருகின்ற நிலையில் தற்போது சுழற்சியிலுள்ள மரபு வகையின் அடிப்படையில் தடுப்பூசி (வேக்சின்) மருந்துக்கான பரிந்துரைகளை உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வழங்கி வருகிறது. தடுப்பூசியால் கிடைக்கப்பெறும் நோயெதிர்ப்புத்திறன் ஒரு ஆண்டுக்குப் பிறகு குறைந்துவிடும் என்பதால், இன்ஃபுளூயன்சாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஃபுளுவிற்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதை இது முக்கியமானதாக்குகிறது.”
பருவகால இன்ஃபுளூயன்சா அல்லது ஃபுளூ காய்ச்சல் என்பது, இன்ஃபுளூயன்சா நச்சுயிரிகளின் பல்வேறு வகைகளால் ஏற்படுகின்ற ஒரு கடுமையான சுவாசப்பாதை தொற்றாகும். இந்த வகைகளுள் ஃபுளூ பருவகாலத்தின்போது பெரும்பாலான நேர்வுகளை வகைகள் A (துணை வகைகள் H1N1, H3N2 மற்றும் இன்னும் பல உட்பட) மற்றும் B ஆகியவையே விளைவிக்கின்றன. ஃபுளூ பாதிப்பு ஏற்படும்போது காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, சுவாச சிரமம், களைப்பு, தலைவலி அல்லது உடம்பு வலி, மூக்கு ஒழுகுதல் ஆகியவை உட்பட, லேசானதிலிருந்து கடுமையான பாதிப்பு அறிகுறிகள் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. தொற்று ஏற்பட்ட நபர் பேசும்போது, இருமும்போது அல்லது தும்மல் போடும்போது காற்றின் வழியாக தொற்றானது பிற நபர்களுக்கு பரவக்கூடும். இத்தொற்றானது எளிதாக பரவக்கூடியது என்பதால், பள்ளிகள், அலுவலகங்கள் அல்லது தொழிலகங்கள் போன்ற பலரும் கூடுகின்ற அமைவிடங்களில் ஃபுளூ தொற்று ஏற்படும் வாய்ப்பும், ஆபத்தும் பலருக்கும் ஏற்படுகிறது.
இன்ஃபுளூயன்சா அனைத்து வயது பிரிவுகளிலும் உள்ள நபர்களை பாதிக்கிறது. எனினும், 5 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகள், முதியவர்கள் (65 வயதிற்கு மேற்பட்டவர்கள்), கர்ப்பிணிப் பெண்கள், இணை நோய்கள் உள்ள நபர்கள் (நீரிழிவு, சிறுநீரக, இதய அல்லது கல்லீரல் நோய்கள், ஆஸ்துமா) மற்றும் நோயெதிர்ப்புத் திறன் குறைவாக உள்ள நபர்கள் உட்பட, குறிப்பிட்ட சில குழுவினர், இந்த சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கின்றனர். இதற்கும் மேலாக, இந்த ஃபுளூ தொற்றானது, அனைவருக்குமே பெரும் சுமையை ஏற்படுத்தும் பிரச்சனையாக இருக்கக்கூடும். மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அதிகரித்த அவசியம், பணியாற்றும் அல்லது உற்பத்தி திறன் குறைவது, இயல்பான நடவடிக்கைகளின் மீது ஏற்படும் கட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகள் ஃபுளூவால் வழக்கமாக ஏற்படுகின்றன. எனவே, ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஃபுளூ வராதவாறு காத்துக்கொள்ளவும் முன்தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இத்தொற்றை தவிர்ப்பது அதிக முக்கியமானதாக இருக்கிறது.
இன்ஃபுளூயன்சா பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும். அடிக்கடி கையை கழுவுவது அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான தூய்மை திரவத்தைப் பயன்படுத்துவது, இருமும்போது அல்லது தும்மும்போது மூக்கையும், வாயையும் மறைத்து மூடிக்கொள்வது ஒருவரது மூக்கு, கண்கள் அல்லது வாயை தொடுவதை தவிர்ப்பது, இன்ஃபுளூயன்சா அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களிடமிருந்து விலகி தள்ளியிருப்பது போன்றவை முன்தடுப்பு நடவடிக்கைகளுள் சிலவாகும். இத்தொற்றால் உடல்நலமில்லாத நபர்களும் தங்களிடமிருந்து தொற்று பிறருக்குப் பரவுவதை தவிர்க்க தங்களையே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மருந்தால் வராமல் தடுக்கக்கூடிய நோயாக இன்ஃபுளூயன்சா இருப்பதால், நீண்டகாலத்திற்கு நோயின் உடலெதிர்ப்பு திறனை பராமரிப்பதற்கு அதிக பயனளிக்கும் முன்தடுப்பு செயல் உத்திகளுள் ஒன்றாக இன்ஃபுளூயன்சா தடுப்பூசி மருந்து இருக்கிறது.
அபாட் இந்தியாவின், மருத்துவ விவகாரங்கள் இயக்குனர் மருத்துவர் ஜிஜோ கரண்குமார் பேசுகையில், “பெரும்பாலான நபர்கள், வழக்கமான சளி தடிமனைப் போன்றதாகவே ஃபுளூ காய்ச்சலை கருதுகின்றனர். ஆனால், ஃபுளூ தொற்று, சளி தடிமனிலிருந்து வேறுபட்டது; கடும் உடல்நல சிக்கல்களுக்கு இது வழிவகுக்கக்கூடும் என்பதால், ஒரு பொது சுகாதார பிரச்சனையாக ஃபுளூ கருதப்படுகிறது. ஃபுளூவின் தீவிரத்தன்மை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக இருப்பது மற்றும் இதற்கான தடுப்பூசி மருந்து பற்றி தவறான கருத்துகள் நிலவுவது ஆகிய காரணங்களினால் பெரும்பாலான நேரங்களில் இதற்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை. அபாட் நிறுவனத்தில் செயலாற்றும் நாங்கள் இந்தியாவில் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவ உறுதி கொண்டிருக்கிறோம். “இன்ஃபுளூயன்சாவிற்கு எதிரான முன்னெடுப்பில் தாய்மார்கள்” என்ற திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஃபுளூ போன்ற தொற்றுகளுக்கு எதிராக பாதுகாக்க மக்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மீது விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக மருத்துவ நிபுணர்களோடும், சங்கங்களோடும் நாங்கள் இணைந்து செயலாற்றுகிறோம். ஆரோக்கியமான வாழ்க்கையை மக்கள் நடத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.” என்று கூறினார். அபோட்டின் 2030 நிலைத்தன்மை இலக்குகள், தொற்றாத நோய்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதற்கும், அவற்றின் தீர்வுகள் மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் தொற்று நோய்களைக் குறைக்க உதவும் அளவிடக்கூடிய, ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளன.
பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்ற ஃபுளூ தடுப்பூசி மருந்தை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் எடுத்துக்கொள்ளும்போது மற்றவர்களுக்கும் அடுக்கு ரீதியிலான பாதுகாப்பு கிடைப்பதற்கும் இது உதவுகிறது; குறிப்பாக சமுதாயத்தில் இப்பாதிப்பிற்கு ஆளாகும் அதிக இடர்வாய்ப்புள்ள நபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவதும் இதில் உள்ளடங்கும். ஆரோக்கியமான வயது வந்த / பெரியவர்கள் மத்தியில் குறிப்பாக இன்ஃபுளூயன்சா நோய் 70 முதல் 90 % வரை வராமல் இன்ஃபுளூயன்சா தடுப்பூசி மருந்து தடுக்கும் திறன் கொண்டதாகும்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெறும் அவசியத்தை குறைப்பதாலும் மற்றும் சுகவீனத்தால் பணிக்கு, செல்லாமல் விடுப்பெடுக்கும் விகிதங்களை குறைப்பதாலும் சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் இத்தகைய தொற்று ஏற்படுத்தும் பொருளாதார சுமையை ஃபுளூவிற்கான தடுப்பூசி மருந்து குறைக்கிறது. மக்களின் ஒட்டுமொத்த வாழ்நாள் காலஅளவை மேம்படுத்தும் அதே வேளையில், ஆரோக்கியமாக வயது முதிர்ச்சி எட்டப்படுவதையும் மற்றும் பணியாற்றும் வயது பிரிவிலுள்ளவர்கள் உடல்நலத்தோடு இருப்பதையும் ஃபுளூ தடுப்பூசி மருந்து பெரிதும் உதவுகிறது. மேலும், மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவர்கள் மீது ஃபுளூ தொற்றால் ஏற்படும் சுமையையும் இது குறைக்கும்.
கருத்துகள் இல்லை