சற்று முன்



சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் ‘சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் !

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் ‘சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் !

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்களுக்கு

நடிகர் ஸ்ரீகாந்த் வாழ்த்து 

சென்னை, பிப்.22,2023: சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள பல்லேடியம் மாலில் புற்று நோய் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்’ கடைபிடிக்கப்பட்டது.

மக்களிடையே புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கேன்கிட்ஸ் கிட்ஸ்கான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு முறையான சிகிச்சை பெற்று தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு இதில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளையும் உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் குறித்து பேசிய தொலைக்காட்சி நடிகை ஸ்ரீதிகா சனீஸ் தங்கள் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வரும் பெற்றோரை பாராட்டியதோடு, சுகாதார பாதுகாப்பு குழுவையும் அவர் கவுரவித்து பேசினார்.

கேன்கிட்ஸ் கிட்ஸ்கான் தொண்டு நிறுவனத்துடன் அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் டபிள்யூசிசி, ஒய்ஆர்ஜி கேர், குருநானக் கல்லூரி, ஆர்எம்கே கல்லூரி மற்றும் எஸ்ஐஇடி கல்லூரியின் தன்னார்வத் தொண்டர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் அரவணைப்பு, அன்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.

இது குறித்து பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மைய இயக்குனர் சபரி நாயர் கூறுகையில், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், புற்றுநோய் பாதிப்பிலிருந்து உயிர் பிழைத்தவர்கள், அவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்கான வலுவான நம்பிக்கையுடன் அவர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்து இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கேன்கிட்ஸ் கிட்ஸ்கான் தொண்டு நிறுவனத்துக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இது குறித்து கேன்கிட்ஸ் கிட்ஸ்கான் அமைப்பு தலைவரும், பெருங்குடல் புற்றுநோயிலிருந்து உயிர் பிழைத்தவருமான பூனம் பாகாய் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்காக, மாநில அரசுகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தை புற்றுநோயியல் சமூகத்துடன் இணைந்து

பணியாற்றி வருகிறோம். குழந்தைப் பருவ புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்குச் சென்று சிகிச்சை பெறும் குழந்தைகளின் சராசரி உயிர் பிழைப்பு விகிதமானது நாடு முழுவதும் சுமார் 50 சதவீதம் ஆகும். பல மாநிலங்களிலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் 125 மையங்களிலும் நாங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 34 முதல் 40 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் புற்று நோய் சிகிச்சைக்காக எந்தவிதமான புற்று நோய் சிகிச்சை மையங்களுக்கும் செல்வதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் உயிர் பிழைப்பு விகிதமானது நம்மைப் போன்ற நாடுகளில் 25 முதல் 35 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்தார்.

குழந்தை பருவ புற்றுநோய்களுக்கு எதிரான போராட்டத்தில் விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அனைத்து அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்ச்சி வலியுறுத்தியது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரும் சிறந்த சிகிச்சை, பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் அவர்கள் பயன்பெற வேண்டும் என்பதாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களும், பங்கேற்பாளர்களும் தங்க ரிப்பன்களை அணிந்து, புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்கள்.



கருத்துகள் இல்லை