சரணம் ஐயனே: பம்பர் !
சரணம் ஐயனே :
பம்பர் படத்தில் இடம்பெற்றிருக்கும் "சரணமே சரணமே சரணம் ஐயனே" பாடல், பண்ணிற்குப் புனைந்த ஒரு பாடலாக இல்லாமல் தன்னுணர்ச்சிப் பாடலாக அமைந்தது. அமைந்தது என்பதைவிட நிகழ்ந்தது என்பது சரியான பதமாக இருக்கும்.
பெரும்பாலான எனது பாடல்கள் ஒத்துணர்வின் வெளிப்பாடாக அமைந்துவிடும் அல்லது பாட்டுடை மாந்தரின் அகநிலையை உள்வாங்கிக்கொண்டு பிரதி செய்ய முயலும். அப்படியான சூழல்களைத் தெரிவுசெய்து எழுதுவதையே வழக்கமாகவும் கொண்டிருக்கிறேன்.
அந்தகரணங்களின் மகுடிக்கு
மயங்கி மயங்கி ஆடும் நாகமாக;
நின்றசையும் சுடரை மீனென்று
கொன்றொழிக்க விழையும் பூனையாக;
சதை விழையும் பித்தனாக;
மது விழையும் அடிமையாக;
அறம் மறந்த மனநிலையின் விளைவாக வாழ்ந்த எனக்கு
பக்தி எனும் எளிய அமுதசுரபியைக் காலம் வழங்கியது.
என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை மூட்டங்களையும் மீறி, எனக்கு நானே விரித்துக்கொண்ட அத்தனை திரைகளையும் எரித்து
ஊழின் கொடையாக விழுந்தது இந்த பக்தி என்று உள்ளுணர்ந்த கணத்திற்குக் காலாதீதத்தின் காலம் வாய்க்காதோ என்றே ஏங்குகிறேன்.
இந்த ஏக்கம் ஒன்றே மெய்.
இந்த ஏக்கத்தோடே பழக்கமும் பயணமும் என்றான இந்தப் பயணத்தில் அமைந்த ஒரு பாட்டுதான்
"சரணமே சரணமே சரணம் ஐயனே."
சமயக்குரவர்கள், சித்தர்கள், இராமலிங்க அடிகள், ஆழ்வார்கள், தாயுமானவர் என்று தமிழ்க்கூறும் மெய்யியலாளர்கள் பலரும் புலம்பாத புலம்பலையா நான் புலம்பிவிடப் போகிறேன் என்று தோன்றும்.
எனது புலம்பல் உலகியல் புலம்பல் அல்லவா? இந்த உலகியல் புலம்பலில் எழுந்து ஆடும் "நான்" எனும் மெய்யின் கூர்மை தனிப்பட்டதல்லவா?
முழுமையில் சென்று கரையும் வரை இந்த நானோடே வாழ்ந்தால் என்னவாம்? என்றெல்லாம் மயக்கத்தில் சீறிக் கிறங்கும் மனம்.
மயங்கிய மனதின் தெளிவை அவாவும் புறப்பாடாக, குற்றவுணர்ச்சியின் பிழிவினின்று சுரந்த பசுங்கண்ணீராக,
வாழ விழையும் ஓர் எளிய மனத்தின் வேண்டுதலாக இப்பாடலை எழுத எண்ணினேன். என்னைச் சாட்சியாக வைத்துத் தன்னைத் தானே எழுதிக்கொண்டது "நான்" என்றே உணர்கிறேன்.
இறக்கிவைக்க இறக்கிவைக்க சுரந்துகொண்டே இருக்கும் இந்த "நான்" இருக்கும்வரை எழுதிக்கொண்டேயிருப்பேனாக.
"ஓர் அறிவிலி
அவன் விழி
உணராத கண்ணீரை உணர்கின்றதே"
- கார்த்திக் நேத்தா.
கருத்துகள் இல்லை