சற்று முன்



எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர் !



அன்ரிச் நோர்க்கியாவின் அனல் பறந்த பந்து வீச்சு X factor ஆக அமைந்ததாக அனிருத்தா ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடரின் 3வது நாளான நேற்று அன்ரிச் நோர்க்கியா, வெய்ன் பார்னல் ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பிரிட்டோரியா கேபிடல்ஸ். இரு முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட போதிலும் முதலில் பேட் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் உத்வேகத்தை இழக்காமல் அபாரமாக விளையாடி 6 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 

பில் சால்ட் 163.82 ஸ்டிரைக் ரேட்டுடன் 47 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார். 194 ரன்கள் இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியால் 5 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்மட்ஸ் 51 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 11 பந்துகளில் 23 ரன்களும், டாம் அபெல் 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசிய போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.

போட்டி முடிவடைந்ததும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சு குறித்து  viacom 18  sports expert அனிருத்தா ஸ்ரீகாந்த் கூறும்போது, “பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 2 ஓவர்களை மெய்டனாக வீசியது முக்கியமானதாக அமைந்தது. பவர்பிளேவில் வெய்ன் பார்னல், அன்ரிக் நோக்கியா மெய்டன் ஓவர்கள் வீசியதுதான் திருப்பு முனையாக அமைந்தது.  அங்குதான் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆட்டத்தை பறிகொடுத்தது. ஏனெனில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தோல்வியடைந்த  வித்தியாசம் 23 ரன்கள்தான். இதை மெய்டனாக வீசப்பட்டட 2 ஓவர்களில் எடுத்திருக்கலாம் என்றுதான் தோன்றும். 

 பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம் கிடைத்திருந்தால் ஆட்டம் வேறு விதத்தில் இருந்திருக்கும். ஏனெனில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பின்கள பேட்டிங் வரிசை அபாரமாக இருந்தது. ஸ்மட்ஸ் சிறப்பாக தொடங்கினார். ஆனால் இறுதியில் அவர்களுக்கு ஆட்டம் துரதிருஷ்டவசமாக முடிந்தது. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தோல்வியடைந்தாலும் போனஸ் புள்ளியை விட்டுக்கொடுக்கவில்லை. போனஸ் புள்ளியை விட்டுக்கொடுத்தால் அதன் பின்னர் அதை சரி செய்வது கடினம்.

பிரிட்டோரியா அணியை பொறுத்தவரையில் அந்த அணிக்கு தொடரை வெற்றியுடன் தொடங்குவது முக்கியமானது. தொடரை வெற்றியுடன் தொடங்கும்போது நம்பிக்கை அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் ஆட்டம் இருதரப்புக்கும் நெருக்கமாகவே சென்றது. ஆனால் பிரிட்டோரியா அணி தீவிர உள்நோக்கத்துடன் விளையாடியது. பிரிட்டோரியா அணியும் தொடக்க ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்தது. ஆனால் அவர்கள் விக்கெட்களை இழந்த ஓவர்களில் ரன்கள் சேர்த்தனர். சன் ரைசர்ஸ் விக்கெட்களை இழந்த நிலையில் ரன்கள் சேர்க்க தவறியது. விக்கெட்டை இழந்தாலும் 4 முதல் 5 ரன்கள் சேர்த்தால் அது பலம். 

190 ரன்களுக்கு மேல் இலக்கு இருக்கும் போது பவர்பிளேவில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தால் அதில் இருந்து மீண்டு வருவது என்பது எப்போதுமே கடினமான விஷயம்.  அன்ரிச் நோர்க்கியா முக்கியமான கட்டத்தில் இரு விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆதில் ரஷித் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட அடுத்த ஓவரிலேயே டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை அன்ரிச் நோர்க்கியா காலி செய்தார். நோர்க்கியாவிடம் பிடித்தது அவரது  சீரான வேகம்தான். இடையில் வேகம் குறைந்த பந்துகளை வீசும் திறனையும் அவர் பெற்றுள்ளார். 

150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய அவர், திடீரென வேகத்தை குறைத்து வீசும் போது விக்கெட்கள் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இந்தத் தொடர் மட்டும் இல்லை. கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டிகளில் அன்ரிச் நோர்க்கியா முக்கியமான கட்டங்களில் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர், அணியின் முக்கிய காரணியாக உள்ளார். சன் ரைசர்ஸ் அணியும் விக்கெட்கள் வீழ்த்தினார்கள். ஆனால் அவர்கள் ஓவருக்கு 8 முதல் 9 ரன்களை வழங்கினர். பிரிட்டோரியா அணி மெய்டன் ஓவர்கள் வீசி விக்கெட்கள் வீழ்த்தினர். தொடக்க ஓவர்களில் ஆடுகளத்தில் பந்துகள் நின்று வரும். அதனால் அதற்கு தகுந்தபடி நேரம் எடுத்து பந்தை அடிக்க வேண்டும்” என்றார்.


கருத்துகள் இல்லை