சற்று முன்



நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்....

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்....



தமிழகத்தில் உள்ள பழைமையான கோயில்களில் திருவண்ணாமலைத் தலமும் ஒன்று. இங்கு சிவபெருமான் அண்ணாமலையார், அருணாசலேஸ்வரர் என்றும் அம்பாள் உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகின்றனர். பஞ்ச பூதத் தலங்களில் திருவண்ணாமலை நெருப்புத் தலமாகும். மனதில் நினைத்தாலே முக்தி தரக்கூடியவர் திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார்.

பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள் என்று பலரும் பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கோயில் கட்டுமானங்களை எழுப்பியிருக்கிறார்கள். தற்போது 21 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக இருக்கிறது.

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் ‘தானே உயர்ந்தவர்’ என்ற ஆணவம் ஏற்பட்டது. அவர்களின் ஆணவத்தைப் போக்க அடியும் முடியும் காணமுடியாத நெருப்புப் பிழம்பாகக் காட்சியளித்தார் சிவபெருமான். அதே நெருப்புப் பிழம்பாக அருள்புரியும் தலம், திருவண்ணாமலை. அதனால், அடி முடி காண முடியாத அண்ணாமலையார் என்று அழைக்கப்படுகிறார் சிவபெருமான்.

அருணம் என்றால் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பு; சலம் என்றால் மலை என்று பொருள். சிவபெருமான் செந்நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மைகொண்ட மலையாக எழுந்தருளியிருப்பதால் அருணாசலம் என்று பெயர் ஏற்பட்டது என்கிறார்கள் மகான்கள்.



இதிகாச காலத்தில், ஈசன் மகிழ மரத்தடியில் சுயம்புலிங்கமாகத் தோன்றினார். அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடிவாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சித்தர்கள் திருவண்ணாமலையாரையும் அன்னையையும் தரிசித்துச் செல்கிறார்கள் என்பது ஐதிகம். அதனால், பௌர்ணமியன்று கிரிவலம் வந்தால் துயர் அனைத்தும் நீங்கி செல்வ வளம் யாவும் பெருகும் என்பது நம்பிக்கை. கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கவடிவில் அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இந்த அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நினைத்தவை யாவும் நடக்கும் என்பது ஐதிகம்.

கிரிவலப் பாதையில்தான் இடுக்குப் பிள்ளையார் சந்நிதியும் அமைந்திருக்கிறது. சிறு துவாரம் வழியே உள் நுழைந்து விநாயகரை வழிபட்டால் குழந்தைப் பேறு ஸித்திக்கும் என்பது பக்தர்கள் அனுபவப் பகிர்வு. இடைக்காடர் சித்தர் சமாதி அடைந்த திருத்தலம் இது. திருவண்ணாமலையிலும், மலையை ஒட்டிய காட்டுப்பகுதிகளிலும் இன்றும் பல்வேறு சித்தர்கள் ரூபமாகவும் அரூபமாகவும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.



அக்காலம் தொட்டு இக்காலம்வரை பல சித்தர்கள், ஞானிகளை ஈர்க்கும் தலமாக விளங்கிவருகிறது திருவண்ணாமலை திருக்கோயில். திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான்தான் அருணகிரிநாதரை ஆட்கொண்டு அருள்பாலித்தவர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையாரைத் தரிசித்துப் பேறு பெறுவோம்...



கருத்துகள் இல்லை